நாடு முழுக்க அடுத்த சில நாட்களில் கொரோனா தடுப்பூசி..!

நாடு முழுக்க கொரோனா தடுப்பூசி போடும் பணி அடுத்த சில நாட்களில் தொடங்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிவித்துள்ளார். முதலில் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும், அடுத்து முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முதல்கட்ட ஒத்திகை கடந்த 2-ந்தேதி 125 மாவட்டங்களில் நடைபெற்றது. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 17 இடங்களில் ஒத்திகை நடத்தப்பட்டது.இந்த நிலையில் இன்று நாடு முழுவதும் 736 மாவட்டங்களில் உள்ள 2,300 மையங்களில் கொரோனா தடுப்பூசிக்கான இரண்டாவது கட்ட ஒத்திகை நடைபெற்றது.
தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களிலும் ஒத்திகை நடத்தி பார்க்கப்பட்டது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 5 இடங்கள் வீதம் மொத்தம் 190 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. காலை 9 மணி முதல் 1 மணி வரை இந்த தடுப்பூசி ஒத்திகை நடந்தது.
தடுப்பூசி ஒத்திகையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக சென்னை வந்திருந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
பின்னர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு சென்று ஹர்ஷவர்தன் பார்வையிட்டார். அதன்பிறகு பெரியமேட்டில் உள்ள மத்திய அரசின் பொது மருத்துவ பொருட்கள் சேமிப்பு கிடங்கையும் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த சில நாட்களில் நாடு முழுக்க கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்றார்.
கொரோனா தடுப்பு பணிகளில் தமிழகம் தலைசிறந்து விளங்குவதாகவும், தமிழக அரசின் பணிகளை பிரதமர் மோடியும் பாராட்டி உள்ளதாகவும் அவர் கூறினார். அதன் பிறகு செங்கல்பட்டில் உள்ள தடுப்பு மருந்து மையம் உள்பட 2 இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
Comments