'இப்படி ஒரு சம்பவம் கேள்விப்பட்டதில்லை! '- கேரளாவில் சமூக ஆர்வலர்கள் வேதனை

கேரளாவில் மகனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெண் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் வைக்கத்தில் பெண் ஒருவர் தன் நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவரின், கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். சில நாள்களுக்கு முன், பெண்ணின் 17 வயது சிறுவன், தாயாரின் செல்போனில் சந்தேகத்துக்குரிய விதமாக சில புகைப்படங்கள் இருப்பதை பார்த்துள்ளார்.
பின்னர், இது குறித்து உடனடியாக வெளிநாட்டில் வசிக்கும் தன் தந்தைக்கும் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக, வைக்கம் திரும்பிய தந்தை , தன் மகன்களிடம் விசாரித்துள்ளார். அப்போது, 14 வயது மகனுக்கு 4 ஆண்டுகளாக அந்த பெண் பாலியல் தொல்லை தந்திருப்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக, சைல்டு லைன் அமைப்பில் தந்தை புகாரளித்தார். தொடர்ந்து, சிறுவனுக்கு கவுன்சிலிங் அளித்து வாக்குமூலம் பதிவு செய்தனர். பின்னர் சைல்டு லைன் அமைப்பினர் கடக்காவூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து, வைக்கத்தில் தன் வீட்டிலிருந்த அந்த பெண் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் அருகேயுள்ள அட்டக்குலங்காரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கேரளாவில் இப்படியொரு சம்பவம் குறித்து கேள்விப்பட்டதில்லை என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Comments