வெளியே பவர்பேங்க் உள்ளே களிமண்!- குடியாத்தத்தில் நூதன மோசடி
பெண்களை வைத்து போலியாக கால் சென்டர் நடத்தி குறைந்த விலையில் செல்போன் , பவர்பேங்க் தருவதாக கூறி களிமண் பார்சல் அனுப்பி மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பிச்சனூர்பேட்டை சுப்பையா தெருவில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் இளம் பெண்கள் அதிகமாக வந்து செல்வதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. குடியாத்தம் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, போலியாக கால் சென்டர் நடத்தி வந்ததும் அங்கே 15 க்கும் மேற்பட்ட பெண்கள் பணியில் இருந்ததும் தெரிய வந்தது .
தமிழகத்தின் பல பகுதிகளில் வாடிக்கையாளர்களை தொலைபேசியில் அழைத்து குறைந்த விலையில் செல்போன் , பவர்பேங்க் , சார்ஜர் அளிப்பதாக கூறி ஆன்லைனில் பணம் கட்ட கூறியுள்ளனர். இவர்களின் பேச்சில் மயங்கி பணம் செலுத்துபவர்களுக்கு பவர் பேங்க் போன்றே வடிவில் உள்ள பிளாஸ்டிக் பொருளில் களி மண்ணை அடைத்து அனுப்பி வந்துள்ளனர்.
வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப் படுவதற்க்காக வைக்கப்பட்டிருந்த களிமண்ணால் நிறைந்த பவர்பேங்குகளையும் போலீசார் கைப்பற்றினர். களிமண்ணால் பார்சல் செய்யப்பட்டிருந்த பவர்பேங்குகளை போலீசார் உடைத்து ஆய்வு செய்தனர். மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட செல்போன்களை கைப்பற்றி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . மேலும் அங்கு பணியில் இருந்த 15 பெண்களில் பெற்றோர்களை அழைத்து அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.இந்த மோசடிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் தலைமறைவாக இருக்கிறார். அவரை, கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
Comments