'கடவுள் போல மக்களுக்கு உதவுகிறார்!' - டிரம்புக்கு கோயில் கட்டிய மண்ணில் சோனு சூட்டுக்கும் கோயில்!

திரையில் வில்லனாகத் தோன்றினாலும் நிஜத்தில் ஹீராவாகத் திகழும், நடிகர் சோனு சூட்டின் மனிதாபிமான உதவிகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக, தெலுங்கானாவில் அவருக்குக் கிராம மக்கள் கோயில் கட்டியுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதிலிருந்தே பொதுமக்களுக்கு, மனிதாபிமான முறையில் பல்வேறு உதவிகளைச் செய்துவருகிறார் சோனு சூட். சமூக வலைத்தளங்கள் மூலம் தம்மிடம் உதவி கேட்கும் அனைவருக்கும் வேண்டிய உதவிகளைச் செய்து வருகிறார். சொந்தப் பணத்தில் கோடிக்கணக்கில் இதற்காகச் செலவிட்டுள்ளார். கையிலிருந்த சேமிப்பு பணம் தீர்ந்ததும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அடமானம் வைத்து மக்களுக்கு உதவி செய்து வருகிறார். திரையில் ஹீராவாக மட்டுமே தெரிந்த சோனு சூட்டை கொரோனா ஹீராவாக அடையாளம் காட்டியுள்ளது. இந்த நிலையில், தெலுங்கானா மாநில கிராம மக்கள் சோனு சூட்டுக்குக் கோயில் கட்டி வழிபட்டுள்ளனர்.
தெலுங்கானா மாநிலம், சித்திப்பேட்டை மாவட்டத்தில் உள்ளது துபண்டா தந்தா கிராமம். இந்தக் கிராம மக்கள் நடிகர் சோனு சூட்டின் சிலையை நிறுவி, கோயில் எழுப்பியுள்ளனர். சோனு சூட்டை புத்தாண்டு நட்சத்திரங்களால் அலங்கரித்து, ஆரத்தி எடுத்து தீபாராதனை காட்டி கிராம மக்கள் வழிபட்டனர். பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து, நாட்டுப் புறப்பாடல்களை பாடி வழிபட்டனர்.
இது குறித்து கிராம மக்கள், “தனது நல்ல செயல்கள் மூலம் சோனு சூட் கடவுள் இடத்தை அடைந்துவிட்டார். அதனால் தான் அவருக்குக் கோயில் கட்டியுள்ளோம். அவர் எங்களுக்குக் கடவுள் போன்றவர்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
சோனு சூட்டின் சிலையை உருவாக்கிய சிற்பி மதுசூதன் பால், “நடிகர் தனது பயனுள்ள தன்மையால் மக்களின் இதயத்தில் இடம் பிடித்துவிட்டார். அவருக்குப் பரிசாக இந்த சிறிய சிலையை உருவாக்கியுள்ளேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
Comments