மண்ணில் பாதி… அவென்ஜர்ஸ் சாதி..! சிறைக்குள் சிக்கிய வான்புலி வகையறா..! ஒரே போஸ்டர்… டோட்டல் டேமேஜ்

0 40531
மண்ணில் பாதி… அவென்ஜர்ஸ் சாதி..! சிறைக்குள் சிக்கிய வான்புலி வகையறா..! ஒரே போஸ்டர்… டோட்டல் டேமேஜ்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே திருமண வீட்டுக்கு வைத்த போஸ்டரில் காவல்துறையை கதறவிட்டதாக வாசகம் இடம் பெற்றதால் வான்புலி வகையறாக்கள் கொலை முயற்சி வழக்கில் கூண்டோடு கைது செய்யப்பட்டுள்ளனர். பொய்வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

மண்ணில் பாதி... அவென்ஜர் ஜாதி... என்று திருமண வீட்டுக்கு பேனர் மற்றும் போஸ்டர் அடிப்பது நம் கிராமத்து காளையர்களிடம் தொன்று தொட்டுவரும் பழக்கம்..! அந்தவகையில் நண்பர்கள் அடித்த ஒற்றை போஸ்டரால் 7 பேரில் ஒருவராக கல்யாண மாப்பிள்ளையும் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த ஐகோர்ட் மகராஜா. காவல்துறையில் சேர்வதற்காக எழுத்துத் தேர்வு எழுதியுள்ள இவர் ரிசல்ட்டுக்காகக் காத்திருக்கும் நிலையில் கடந்த 11 ந்தேதி திருமணம் நடந்துள்ளது.

இவரது திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் அடிப்பதற்கு பதிலாக மணமகன் மற்றும் மணமகள் படத்துடன் தங்கள் சாதியின் பெயரைக் குறிப்பிட்டு காவல்துறையை இழிவுபடுத்தி போஸ்டர் அடித்ததாகக் கூறப்படுகின்றது.

காவல்துறை காட்டுற இடத்துல மேயுற ஆடுபுலி இல்ல..ல..! காக்கிச் சட்டையை கதற வைக்கிற வான்புலி..! என்ற வாசகத்துடன் போஸ்டர் அடித்த வான்புலி வகையறாக்களின் புகைப்படங்களும் அதில் இடம் பெற்று இருந்தன.

போஸ்டர் அடித்த இவர்கள் காக்கிச் சட்டையை கதற வைத்தார்களோ இல்லையோ, இவர்களையும் இவர்களது குடும்பத்தினரையும் காவல்துறையினர் கதற விட்டுள்ளனர்.

இந்த போஸ்டர் விவகாரம் வாட்ஸ் ஆப்பில் தீயாய்ப் பரவ, கடந்த 15 ந்தேதி புதுமாப்பிள்ளை ஐகோர்ட் மகராஜா, கொம்பையா, சுரேஷ்குமார், சக்திமணி, சுப்பிரமணிகண்டன், ஆனந்த மணிகண்டன், சரவணன் ஆகிய 7 வான்புலிகளையும் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகின்றது.

போஸ்டர் அடித்த 7 பேரும் தோட்டாராஜ் என்பவருடன் சேர்ந்து செல்லப்பாண்டி என்பவரைக் கொலை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட வான்புலிகள் 7 பேரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் 7 பேரும் பொய்யான வழக்கில் கைது செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

போலீசாரை இழிவுபடுத்தி பேனர் வைத்ததால் தங்கள் பிள்ளைகள் மீது போலீசார் பொய்வழக்குப் போட்டு சிறையில் அடைத்து விட்டதாகக் கூறி அவர்களது குடும்பத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமாரை சந்தித்து புகார் மனு அளித்தனர்

தோட்டாராஜ் யார் என்றே தெரியாது என்றும் வால்போஸ்டரில் தங்கள் பிள்ளைகள் தெரியாமல் செய்த தவறை மன்னித்து , தங்கள் பிள்ளைகளை வழக்கில் இருந்து விடுவித்துத் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெற்றோரை விட தங்கள் பிள்ளைகளின் நலனின் அக்கறை கொண்டவர்கள், இந்த மண்ணில் இருக்க போவதில்லை என்பதை உணர்ச்சி வேகத்தில் போஸ்டர் மற்றும் பேனர் அடிக்கும் கிராமத்து இளைஞர்கள் உணரவேண்டும்.

அதே நேரத்தில் இந்த சம்பவத்தில் பொய்யாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா ? என்பது குறித்து உயர் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி போலீஸ் வேலையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் புதுமாப்பிள்ளை ஐகோர்ட் மகராஜா உள்ளிட்ட 7 பேருக்கும் நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments