நிவர் புயல் காரணமாக நாளை அரசு பொது விடுமுறை

நிவர் புயல் காரணமாக கனமழை பெய்யும் என்பதால், தமிழக அரசு நாளை பொதுவிடுமுறை அறிவித்துள்ளது.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்த முதலமைச்சர், நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். அமைச்சர்கள் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், புயல் மற்றும் கனமழை பாதிப்புகளை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். தங்க வைப்பதற்கு பள்ளி, கல்லூரிகள், சமுதாயக் கூடங்கள், திருமண மண்டபங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றும், புயலால் சாயும் மரங்களை அப்புறப்படுத்த தேவையான கருவிகள், தேங்கியுள்ள நீரை அகற்றுவதற்கான உபகரணங்கள் உள்ளிட்டவற்றுடன் மீட்பு, நிவாரணக் குழுக்கள் தயார்நிலையில் உள்ளன என்றும் முதலமைச்சர் கூறினார்.
கடலோர மாவட்டங்களில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என்றும், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். புயல் பாதிக்க வாய்ப்புள்ள சுமார் 4000 இடங்களில் தனிக்கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் விளக்கினார்.
அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி மக்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்திய முதலமைச்சர், நாளை அரசு பொதுவிடுமுறை அறிவித்தார்.
புயலை எதிர்கொள்ள தமிழக அரசுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்று பிரதமர் உறுதி அளித்திருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். சென்னையில் மழைப் பொழிவை பொறுத்தே செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பது குறித்த முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
Comments