40ஆண்டு கடந்து தமிழகம் வரும் சாமி சிலைகள்..!
மயிலாடுதுறை மாவட்டம் அனந்தமங்கலம் ராஜகோபாலசுவாமி கோயிலில் இருந்து 40ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட ராமர், லட்சுமணர், சீதை ஐம்பொன் சிலைகள் லண்டனில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. மத்திய அமைச்சரிடம் இருந்து சிலைகளைப் பெற்றுக் கொண்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், அவற்றை இன்று சென்னைக்கு கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் அனந்தமங்கலத்தில் உள்ள ராஜகோபாலசுவாமி கோவிலில் இருந்த, 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ராமர், லட்சுமணர், சீதை மற்றும் ஆஞ்சநேயர் வெண்கலச் சிலைகளை 1978ஆம் ஆண்டு மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
1988ல் சிபிசிஐடி விசாரணைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டபின், நாச்சியார்கோயிலைச் சேர்ந்த மூவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இதன்பின்னர் சிலையை தேடும் பணி தொடர்ந்து கொண்டே இருந்தது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், லண்டனைச் சேர்ந்த டீலர் ஒருவர் சிலைகள் விற்பனைக்கு உள்ளதாக இணையத்தில் படங்களை வெளியிட்டிருந்தார். இதில் தமிழக கோவிலைச் சேர்ந்த சிலைகள் இருப்பதை அறிந்த சிலை மீட்பு பணிக்குழு என்ற அமைப்பை நடத்திவரும் சிங்கப்பூரில் வசிக்கும் விஜயகுமார் அந்தப் படங்களை தமிழக சிலை தடுப்பு பிரிவு போலீசாருக்கு அனுப்பி வைத்தார்.
அனந்தமங்கலம் கோவிலில் காணாமல் போன ராமர், லட்சுமணர், சீதை சிலைதான் அவை என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட சிலை தடுப்பு பிரிவு போலீசார், உரிய ஆதாரங்களோடு சிலைகளை மீட்க பிரிட்டன் அரசுக்கு அனுப்பினர். இந்த தகவலை அறிந்த டீலர், 3 சிலைகளையும் லண்டன் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
கடந்த மாதம் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்ட சிலைகள் டெல்லி வந்து சேர்ந்தன. இந்த சிலைகளை சுற்றுலாத்துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல், தமிழக சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் வழங்கினார்.
சிலைகளைப் பெற்றுக் கொண்ட சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய்குமார் சிங், சிலை மீட்பு முயற்சிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதுணையாக இருந்தார் என்றும், இந்த மூன்று சிலைகளுடன் கடத்தப்பட்ட அனுமன் சிலையும் விரைவில் தமிழகம் கொண்டு வரப்படும் என்றும், மீட்கப்பட்ட சிலைகள் அறநிலையத்துறை வசம் இன்று ஒப்படைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
40ஆண்டுகளுக்கு முன் திருட்டு போன சாமி சிலைகள் மீட்கப்பட்டதை அறிந்து மகிழ்ச்சியில் திளைக்கும் அனந்தமங்கலம் கிராமத்தினர், அனுமன் ஜெயந்திக்கு முன்னதாக சிலைகளை கோவிலில் வைக்க அரசு நடவடிக்க எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Comments