மகா கூட்டணிக்கு தலைமை தாங்கும் லாலு குடும்பம்

0 2440
மகா கூட்டணிக்கு தலைமை தாங்கும் லாலு குடும்பம்

பீகார் சட்டமன்ற தேர்தலில் மகா கூட்டணிக்கு தலைமை தாங்கும், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி, அதை நிறுவிய லாலு பிரசாத் யாதவ் குடும்பம் பற்றிய செய்தித் தொகுப்பு

72 வயதான லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி, மகன்கள் தேஜ் பிரதாப், தேஜஸ்வி, ஆகியோர் பீகாரை தாண்டியும் அரசியல் அரங்கில் பிரபலமானவர்கள். லாலு பிரசாத் யாதவ், 1990 ஆம் ஆண்டு பீகார் முதலமைச்சராக இருந்தபோது, போலி ரசீதுகள் தாக்கல் செய்து 37 கோடியே 70 லட்சம் ரூபாய் அளவிற்கு கால்நடைத் தீவன ஊழல் செய்ததாக 1996ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

இதனால் லாலு பிரசாத்துக்கு ஜனதா தள கட்சிக்குள் எழுந்த எதிர்ப்பு காரணமாக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் என்ற தனிக்கட்சி தொடங்கினார். பீகாரின் முதல் பெண் முதலமைச்சராக, தனது மனைவி ராப்ரி தேவியை நியமித்தார். பெயரளவுக்கு ராப்ரி தேவி முதலமைச்சராகவும், அவரை முழுமையாக இயக்குபவராக லாலு பிரசாத்தே இருந்தார் என்ற சர்சைகளைப் பற்றி கவலைப்படவில்லை.

மாநிலத்தில் அதிகாரத்தை இழந்த பிறகு டெல்லி பக்கம் கவனைத்தை திருப்பி, மன்மோகன் சிங் அரசில் ரயில்வே அமைச்சராக இருந்தபோதும், கவனத்தை ஈர்ப்பவராகவே இருந்தார். முதலமைச்சராக இருந்த போது கால்நடைத் தீவனம் வாங்குவதில் ஊழல் செய்ததாக 5 வழக்குகள், சொத்து குவிப்பு வழக்கு, ரயில்வே டெண்டர் ஊழல் வழக்கு உள்ளிட்ட வழக்குகள் லாலு பிரசாத் மீது தொடரப்பட்டன.

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எம்.பி. பதவியை இழந்தார். லாலு பிரசாத் தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். கடந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளமும், நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் இணைந்து மகா கூட்டணியாக போட்டியிட்டன. இதில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 81 இடங்களை வென்றது. நிதீஷ் குமார் முதலமைச்சராகவும், தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர்.

பீகாரின் இளம் துணை முதலமைச்சர் என்று அப்போது அறியப்பட்ட தேஜஸ்வி ஒரு கிரிக்கெட் வீரர் ஆவார். ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார். கிரிக்கெட்டில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக அவர் பெரிதாகக் களம் காணவில்லை என்றாலும், அரசியல் களத்தில் அடித்து ஆடுபவராக கவனம் பெற்றார்.

சிபிஐ-யும், அமலாக்கத்துறையும், ரயில்வே ஐஆர்சிடிசி தொடர்பான ஊழல் குற்றச்சாட்டில், அப்போதைய துணை முதலமைச்சர் தேஜஸ்வி உள்ளிட்ட லாலு பிரசாத் குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து துணை முதலமைச்சர் பதவியில் இருந்து தேஜஸ்வி விலக மறுத்ததால் கூட்டணி முறிந்தது. பிறகு பாஜக ஆதரவுடன் நிதீஷ்குமார் முதலமைச்சராக தொடர்ந்தார். அதைத் தொடர்ந்து ராஷ்ட்ரீய ஜனதா தளம் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து தற்போது தேஜஸ்வி தலைமையில் மகா கூட்டணியுடன் தேர்தல் களம் கண்டது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments