அஜாக்கிரதை அரசு ஊழியர்கள்... தமிழக மக்கள் வரி பணத்தில் ஜாலியாக வாழும் மகாராஷ்டிர வாலிபர்!

0 5534

சேலத்தில் அரசுப் பணம் தவறுதலாகப் பரிமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் பணத்தை திருப்பித் தர மறுக்கும் மகாராஸ்டிர வாலிபர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர், மலைவாழ் மக்கள் நலத் துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்தத் துறையின் வங்கிக் கணக்கு சேலம் கோட்டை பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் உள்ளது. ஆதிதிராவிடர் மலைவாழ் மக்கள் நலத் துறை அலுவலகம் கணக்கிலிருந்து ஊரகப்பகுதி நிதியை மற்ற வங்கி கணக்குகளுக்கு மாற்றம் செய்வது வழக்கம். அதன்படி, கடந்த மார்ச் மாதம் 31 - ம் தேதி 8 லட்சத்து 64 ஆயிரத்து 500 ரூபாய் ஆதிதிராவிடர் நலத்துறை ஊரகப்பகுதி யூகோ வங்கியின் குறிப்பிட்ட கணக்கு எண்ணுக்கு மாற்றப்பட்டது.

ஆனால், ஆன்லைன் மூலம் மாற்றம் செய்த ஆதிதிராவிடர் நலத்துறை ஊழியர் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ரோகித்குமார் என்பவரின் வங்கி கணக்கு எண்ணுக்கு தவறுதலாக பணத்தை மாற்றம் செய்து விட்டார். ரோகித்குமார் தனது வங்கி கணக்கில் திடீரென்று ரூ. 8 லட்சத்து 64 ஆயிரம் வந்ததால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார். பின்னர், அந்தப் பணத்தை மொத்தமாக எடுத்து ஜாலியாக செலவழித்து வந்தார்.

இந்த நிலையில், ஊரகப்பகுதி ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் தங்களுக்கு உரிய பணம் வராதது குறித்து ஆதிதிராவிடர் மலைவாழ் மக்கள் நலத் துறை அலுவலகத்துக்கு வந்து அதிகாரிகளை சந்தித்து விளக்கம் கேட்டனர். அவர்களோ, உங்களுக்கு ஏற்கெனவே பணம் அனுப்பியாகி விட்டது என்று பதில் அளித்தனர். இதனால், அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர், ஊரகப்பகுதி ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்று விசாரித்தனர். அப்போதுதான் ரூ, 8,64,500 தவறுதலாக மகாராஷ்டிர மாநிலம் ரோகித்குமார் என்பவரின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் மூலம் ரோகித் குமாரை தொடர்பு கொண்ட ஆதிதிராவிடர் மலைவாழ் மக்கள் நலத் துறை அதிகாரிகள் பணத்தை திரும்ப வங்கியில் செலுத்துமாறு கேட்டனர்.

ஆனால், ரோகித் குமார் பணத்தை திருப்பிச் செலுத்த மாட்டேன் எனக் கறாராக கூறி விட்டார். அதிகாரிகள் ரோகித் குமாரை மிரட்டிப் பார்த்தும் எந்த பலனும் இல்லை. இதுகுறித்து ஆதிதிராவிடர் மலைவாழ் மக்கள் நலத் துறை அலுவலர் சாந்தி சேலம் டவுன் காவல் நிலையத்தில் ரோகித்குமார் புகார் அளித்துள்ளார்.

அதிகாரிகள் செய்த தவறால் தமிழக மக்களின் வரிப்பணத்தில் மகாராஸ்டிர மாநில வாலிபர் ஜாலியாக வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments