காதல் திருமணம்... சிறு சிறு சண்டை... வாழத் தொடங்கும் முன்பே வாழ்வை முடித்த இளம் தம்பதி!

0 73015
இளங்கோ மற்றும் ரம்யா

ந்தியூரில் வாழத் தொடங்கும் முன்பே புரிதல் இல்லாமல் 23 வயதே நிரம்பிய இளம் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே ஓரிச்சேரி கிராமம் மல்லியூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகன் இளங்கோ(23), இவர் குமாரபாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ படிக்கும் போது திருச்செங்கோடு தோக்கவாடி சித்தேஸ்ரன் பகுதியைச் சேர்ந்த ரம்யா (23) என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். மல்லியூரில் இளங்கோவனின் பெற்றோர் வீட்டருகே மற்றோரு வீட்டில் தம்பதிகள் தனியாகக் குடும்பம் நடத்தி வந்தனர்.

இளங்கோ தனியார் டிவி ஷோரூம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இளங்கோ வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டு இரவு வீட்டுக்கு திரும்பியபோது மனைவி தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். உடனே, துக்கம் தாளாமல் இளங்கோவும் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். வீட்டுக்குள் சென்ற இளங்கோ வெகு நேரமாகியும் வெளியே வராததைக் கண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதவை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்று பார்த்தனர். உள்ளே கணவன் மனைவி இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சம்பவம் குறித்து ஆப்பகூடல் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருமணமாகி மூன்று மாதங்களே ஆவதால் கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராமன் மற்றும் பவானி துணைக் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் கணவர் மனைவிக்கிடையே அவ்வப்போது சிறு சிறு சண்டைகள் நடந்துள்ளன. இதன் காரணமாக, ஒருவரைத் தொடர்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. காதலித்து திருமணம் செய்த மூன்று மாதங்களில் காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டிருப்பது உறவினர்களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments