' என் கணவர் சார்பாக நான் சல்யூட் அடிக்கிறேன்! '- கொரோனாவால் கணவரை பறி கொடுத்த மனைவியின் உறுதி

0 5100


கொரோனா தொற்றால் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உயிரிழந்த கணவரின் சார்பாக அவரின் மனைவி சல்யூட் அடித்து மரியாதை செய்துள்ள சம்பவம் நெகிழ்வை ஏற்படுத்தியது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் உட்கோட்டம் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சண்முகம் (வயது 51) . இவர் கடந்த 24 - ஆம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சண்முகத்துக்கு கொரோனா தொற்று பாதித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, வாணியம்பாடி அரசு மருத்துவமனை கொரோனா மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சண்முகம் பரிதாபமாப உயிரிழந்தார். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் . விஜயகுமார் நேற்று வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து பாதுகாப்பு கவச உடை அணிந்து சண்முகத்தின் உடலுக்கு இறுதிஅஞ்சலி செலுத்தினார்.image

அப்போது , சண்முகத்தின் மனைவி திலகவதி தன் கணவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட காலத்திலும் கடமையை தவறாது செய்ய வேண்டும் என்ற உணர்வோடு இருந்தார். கடமை தவாறமல் பணியாற்றுவதற்கு உங்களைத் தான் மேற்கோள் காட்டுவார். என் கணவர் உயிரோடு இருந்தால் இப்போது உங்களுக்கு சல்யூட் அடித்து மரியாதை செய்திருப்பார். அவர் இறந்து போய் விட்டதால் என் கணவர் சார்பாக நான் உங்களுக்கு மரியாதை அளிக்கிறேன் என்று கூறியவாறே போலீஸ் சல்யூட் அடித்தார். அப்போது, திலகவதியின் மகள் தன் தாயாரை கட்டிக் கொண்டு அழுதது காண்போர் கண்களை குளமாக்கியது. இந்த காட்சியை கண்ட அங்கிருந்த போலீஸாருக்கும் கண்களில் நீர் திரண்டு விட்டது.

இந்த துக்கக்கரமான சூழலிலும் திலகவதி காட்டிய உறுதி எஸ்.பி. விஜயகுமாரை நெகிழ வைத்தது. சண்முகத்தின் உறவினர்களுக்கு ஆறுதல் அளித்த எஸ்.பி. விஜயகுமார் தேவையான உதவிகள் செய்யப்படும் என்று வாக்களித்தார். கொரோனாவுக்கு பலியான உதவி ஆய்வாளர் சண்முகத்துக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments