தமிழக வளம் சுரண்டல்.. கேரள கடத்தல்காரனுக்கு ரூ 9.5 கோடி அபராதம்..! அதிகாரிகள் கலக்கம்

0 7158
தமிழக வளம் சுரண்டல்.. கேரள கடத்தல்காரனுக்கு ரூ 9.5 கோடி அபராதம்..! அதிகாரிகள் கலக்கம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வண்டலோடையில் மணலையும் கூழாங்கற்களையும் டன் கணக்கில் அள்ளி எம்.சாண்ட் தயாரித்து கடத்திய கேரள மணல் கடத்தல் மன்னனுக்கு ஒன்பதரை கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடத்தலுக்கு உதவியதாக கிராம நிர்வாக அலுவலரும் உதவி ஆய்வாளரும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள நிலையில் அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா தெற்கு கல்லிடைக்குறிச்சி பகுதியில் பூமி எம்சாண்ட் என்ற பெயரில் தனியார் மணல் குவாரி ஒன்று அதிகாரிகளின் ஆசியோடு செயல்பட்டு வந்தது.

கோதையாற்றின் கிளை நதியான வண்டலோடையில் இருந்து மணலை மட்டுமல்லாமல், கூழாங்கற்கறையும் பாறைகளையும் பொக்லைன் மூலம் அள்ளி எடுத்து வந்து அதனை எம்.சாண்டாக மாற்றி லாரிகள் மூலம் கேரளாவுக்கு கடத்தி வந்தனர். ஓராண்டுக்கும் மேலாக முறைகேடாக வண்டலோடை நதி மணலை எடுத்து எம் சென்ட் என்ற பெயரில் விற்றுவந்த நிலையில் பல்வேறு சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்தும் பலனில்லை..!

காவல்துறையினரும் கண்டு கொள்ளவில்லை, மாவட்ட கனிமவளத்துறையில் உள்ள பல்வேறு அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்த நிலையில் இந்த மணல் கடத்தல் குறித்து சிவசங்கரன் என்பவர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு மணல் கடத்தலை தடுக்க தவறியதற்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து வேறு வழியின்றி நடவடிக்கை எடுக்கும் நிலை ஏற்பட்டது.

அம்பாசமுத்திரம் மண்டல துணை வட்டாட்சியர் மாரிசெல்வம் ஆய்வு செய்து அங்கிருந்து தினமும் 50 லாரிகள் வீதம் இதுவரை 11 ஆயிரம் டன் மணல் திருட்டு தனமாக கடத்தப்பட்டிருப்பதை கண்டுபிடித்ததாக கொடுத்த புகாரின் பேரில் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த போலி நிருபர் ஜான் விக்டர், பால்ராஜ், ஆத்திப்பாண்டியன், சங்கர நாராயணன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். சேரன்மகாதேவி சார் ஆட்சியர் பிரதீப் தயாள் நேரடியாக விசாரணையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மணல் கூழாங்கற்கள், பாறை என கனிமவளங்கள் கொள்ளை போனது கண்டுபிடிக்கப்பட்டதால் பூமி எம் சாண்ட் என்ற பெயரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான கேரளத்தை சேர்ந்த மனுவேல்ஜார்ஜுக்கு ஒன்பதரை கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

மணல் அள்ள உதவியவர்களை விரைவாக கைது செய்த காவல்துறையினர் மணல் கடத்தலுக்கு காரண கர்த்தாவாக இருந்து கோடி கோடியாக சம்பாதித்த மனுவேல்ஜார்ஜ் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. மேலும் இந்த மணல் கடத்தலை தடுக்க தவறியதோடு உடந்தையாக இருந்ததாக கிராம நிர்வாக அலுவலர் மோகன், உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் தற்காலிக பணி நிக்கம் செய்யப்பட்டனர்

இந்த கனிமவளக் கொள்ளைக்கு வட்டாட்சியர் கனிமவளத்துறை அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் உடந்தையாக இருந்ததாக கூறப்படும் நிலையில், பெயரளவிற்கு இருவர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்து விட்டு, உடந்தையாக இருந்த மேலதிகாரிகளை தப்பவைக்க முயற்சி நடப்பதாக கூறப்படுகின்றது.

எனவே மாவட்ட ஆட்சிதலைவர் தலையிட்டு உடந்தையாக இருந்த அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments