அறிமுகம் இல்லாதோரின் நட்பு.. சிக்கலை ஏற்படுத்தும்..! காவல்துறை எச்சரிக்கை

0 3713

பேஸ்புக்கில் நட்பாக அறிமுகமாகி மிரட்டிப் பணம்பறிக்கும் செயல்கள் அதிகரித்துள்ளதால், தெரியாதவர்களிடம் இருந்து வரும் நட்பு அழைப்புக்களை ஏற்க வேண்டாம் எனச் சென்னைக் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். 

சென்னையைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரின் பேஸ்புக் நட்பு அழைப்பை ஏற்று நண்பராகியுள்ளார். பிறகு அந்த பெண்மணி காதலிப்பதாகக் கூறவே அதனை நம்பி அந்த இளைஞர் தனது நிர்வாணப் புகைப்படம் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து சென்னை இளைஞரின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை வைத்து கொண்டு 2லட்ச ரூபாய் பணம் கேட்டு பிலிப்பைன்ஸ் பெண்மணி மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன இளைஞர் அந்த பிலிப்பைன்ஸ் பெண்மணிக்கு 2 லட்ச ரூபாபை கூகுள் பே வழியாக அனுப்பியுள்ளார்.

அதன் பிறகு மேலும் 5 லட்ச ரூபாய் கேட்டு பிலிப்பைன்ஸ் பெண்மணி மிரட்டியதால் வேறு வழியில்லாமல் தியாகராய நகர் சைபர் கிரைம் பிரிவில் சென்னை இளைஞர் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இளைஞர் பிலிப்பன்ஸ் பெண்ணுக்கு பணம் அனுப்பிய வங்கியை தொடர்பு கொண்டு அதனை நிறுத்தி வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

இதே போல், மற்றொரு நபர் தியாகராய நகர் சைபர் கிரைம் போலீசில் அளித்துள்ள புகாரில், மர்ம நபர் ஒருவரிடம் இருந்து தனக்கு வந்த இ மெயிலில், தான் தொடர்ந்து ஆபாச படங்களை பார்ப்பதாகவும், தனது கம்ப்யூட்டரை ஹேக் செய்து அதனை கண்டுபிடித்துள்ளதாகவும், உடனடியாக 1900 பிட் காய்ன் பணத்தை அனுப்பவில்லை என்றால் ஆபாச படம் பார்த்த விவரங்களை நட்பு வட்டாரத்திற்கு அனுப்பப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாகவும் வழக்குப் பதிவு செய்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் கடும் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு நிதியுதவி கேட்பது போல் ஏமாற்றிப் பணம் பெறும் நிகழ்வுகளும் அதிகரித்துள்ளதாக சைபர் கிரைம் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதனால் இணையவழி மோசடிக்காரர்களிடம் ஏமாறாமல் இருக்கப் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments