கைதான கன்னட நடிகைகள்.. தலை முடியை வைத்து போதை பொருள் பயன்பாட்டை கண்டறியும் சோதனை..!

0 4279

போதைப்பொருள் புகாரில் கைதான கன்னட நடிகைகள் ராகினி, சஞ்சனா ஆகியோரின் தலை முடியை வைத்து அவர்கள் பயன்படுத்திய போதை பொருட்களை கண்டறியும் சோதனை மேற்கொள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

கன்னட சினிமா பிரபலங்கள் போதை பொருள் பயன்படுத்துவதாக எழுந்த புகாரில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரையும் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வரும் மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியதை உறுதி செய்வதற்காக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

பெங்களூரு கே.சி அரசு மருத்துவமனையில், பரிசோதனைக்கு வந்த இருவருக்கும் ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்ட போது, ராகிணி சிறுநீர் மாதிரியுடன் தண்ணீரை கலந்து கொடுத்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து மருத்துவர்கள் எச்சரித்து அனுப்பியதை அடுத்து வேறு மாதிரி சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து பரிசோதனை முடிவில் இருவரும் குறைந்த அளவு போதை பொருள் பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் தலை முடியை பரிசோதனை செய்தால் கடந்த ஓராண்டு வரை என்னென்ன போதை பொருட்கள் பயன்படுத்தினார்கள் என்பதை கண்டறிய முடியும் என்பதால், அதற்காக ஐதராபாத்தை சேர்ந்த நிபுணர்கள் பெங்களூரு வரவழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் நடிகைகள் இருவரும் தலை முடி மாதிரிகளை கொடுக்க மறுத்து வருகின்றனர்.

இதனிடையே நடிகை சஞ்சனாவுடன் லிவ்விங் டு கெதராக இருந்து வந்த மணிப்பால் மருத்துவமனை மருத்துவர் அஜீஜ், நடிகைக்கு சொகுசு கார், வீடு, யோகா பயிற்சி மையம் திறக்க பண உதவி வழங்கியது தொடர்பான ஆவணங்கள் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்துள்ளது.

மேலும் போதை பொருள் சப்ளையர்களுடன் சேர்ந்து, 7 முதல் 8 வீடுகள் வரை வாங்கி அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் யார், யாரிடம் இருந்து வீடுகளை வாங்கினார், யாருக்கு வீடுகளை விற்பனை செய்தார் என்ற விவரங்களும் கிடைத்துள்ளன.

மேலும் கொழும்பில் கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில், கலந்து கொண்ட சஞ்சனாவுக்கு கோடி, கோடியாக பணம் கொடுக்கப்பட்டதாகவும், அந்த நிகழ்ச்சியில் ஹவாலா முறையில் பண பறிமாற்றம் நடந்ததற்கான ஆதாரங்களும் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்துள்ளன. அவற்றை வைத்து சஞ்சனாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments