அமெரிக்காவில் 10 லட்சம் ஏக்கர் நிலத்தை நாசம் செய்த காட்டுத் தீ.. 2.40 லட்சம் பேர் உடனடியாக வெளியேற உத்தரவு..!

0 1195

கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் 2 லட்சத்து 40 ஆயிரம் பேரை உடனடியாக வெளியேறுமாறு மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது. 

அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் அதிக வெப்பநிலை மற்றும் தொடர் மின்னல் தாக்குதலால் கடந்த வாரம் முதல் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை புதிதாக 100 இடங்களில் நெருப்புப் பற்றியதாக வனவியல் மற்றும் தீ பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

கொளுந்துவிட்டெரியும் பெருநெருப்பினால் 12 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு சாம்பல் மேடாகக் காட்சியளிக்கிறது. 700க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ள நிலையில் 6 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். நெருப்பை அணைக்கும் பணியில் 14 ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

தரைவழியாக இந்த வீரர்கள் நெருப்பினை அணைத்தாலும் அடர்ந்த வனப்பகுதியில் பற்றி எரியும் தீயை அணைக்க விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கலிபோர்னியாவில் தீவிபத்துகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மற்றும் வணிகங்களுக்கு தற்காலிக வீட்டுவசதி, வீட்டு பழுது மற்றும் பிற தேவைகளுக்கு பணம் செலுத்த கூட்டாட்சி நிதியைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் வாஷிங்டனில் நேற்று பேசிய டிரம்ப், காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியதுடன், மாகாண ஆளுநருடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் வசிக்கும் 2 லட்சத்து 40 ஆயிரம் மக்கள் அப்பகுதியை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வடக்கு கலிபோர்னியா மற்றும் சியாரா நெவேடா மலைப்பகுதிகளில் வசிப்போருக்கு சிவப்புக் கொடி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments