அதிகரிக்கும் மாஞ்சா பயன்பாடு... எச்சரிக்கும் காவல்துறை... ஒரே நாளில் 55 பேர் கைது

0 2508
அதிகரிக்கும் மாஞ்சா பயன்பாடு... எச்சரிக்கும் காவல்துறை... ஒரே நாளில் 55 பேர் கைது

சென்னையில் மீண்டும் மாஞ்சாநூல் கலாச்சாரம் தலைதூக்க துவங்கியுள்ள நிலையில், ஒரே நாளில் மாஞ்சா நூல் அறுத்து 4 பேர் காயமடைந்ததால் மாஞ்சா நூல் தயாரித்து விற்பவர்கள், அதனை வாங்கி காற்றாடி விடுபவர்களை போலீசார் களையெடுக்க துவங்கியுள்ளனர். அந்தவகையில் ஒரே நாளில் 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விடுவதால், விபத்து மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுவதால், அதனை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, மீறினால் குண்டர் சட்டம் பாயும் எனவும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். அதையும் மீறி ஊரடங்கு நாட்களில் மாஞ்சா நூல் பயன்படுத்தி காற்றாடி விடுவது மீண்டும் அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் மூலக்கடை மேம்பாலம், எண்ணூர் விரைவு சாலை, திருவொற்றியூர் பகுதிகளில் மாஞ்சா நூல் அறுத்ததில் ஒரு பெண் உட்பட 4 பேர் காயமடைந்தனர். இதையடுத்து திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் காற்றாடி விற்பனையில் ஈடுபட்ட விக்னேஷ் மற்றும் தேவா ஆகிய இருவரை கைது செய்த போலீசார், அவர்கள் ஆன்லைனில் வாங்கி விற்பனை செய்தது போக வீட்டில் மீதமிருந்த 170 காற்றாடிகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் வட சென்னை பகுதி முழுவதும் அதிரடி சோதனையில் இறங்கிய தனிப்படை போலீசார், மாஞ்சா நூல் பயன்படுத்தியவர்கள், தயாரித்து விற்றவர்கள் என 55 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடம் இருந்து 188 காற்றாடிகள், 51 மாஞ்சா நூற்கண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மாஞ்சா மட்டுமின்றி சாதாரண பட்டம் பறக்கவிட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும் மாஞ்சா பயன்பாட்டை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments