ஜெட்டா விமான நிலையத்தில் வேலை; கை நிறைய சம்பளம்! -' பாசக்கார' யானைக்காக உதறிய பொறியாளர்

0 3958

சவுதி அரேபிய விமான நிலையத்தில் பார்த்து வந்த வேலையை உதறி விட்டு மீண்டும் தாய்நாடு திரும்பியுள்ளார் கும்பகோணத்தை சேர்ந்த பொறியாளர் ஒருவர். அதற்கு காரணம் ஒரு பாசக்கார யானை.

கும்பகோணத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகன் கோவிந்தராஜூ பொறியியல் படித்தவர். கோவிந்தராஜூவின் குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக வீட்டில் யானை வளர்த்து வருகின்றனர். தற்போது, கோவிந்தராஜூ வீட்டில் ஷியாமளா என்ற யானை வளர்ந்து வருகிறது.

கடந்த 2003 - ஆம் ஆண்டிலிருந்து இந்த யானை கோவிந்தராஜ் வீட்டில் செல்லப்பிள்ளை போல வாழ்கிறது. கோவிந்தராஜூ சிறு வயதிலிருந்தே இந்த யானை மீது அதீத பாசம் வைத்திருந்தார். பள்ளி செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் யானையுடன்தான் கோவிந்த ராஜூ இருப்பார். யானையை குளிக்க ஆற்றுக்கு அழைத்து செல்வது, அதற்கு உணவு ஊட்டுவது , அதை அலங்கரித்து அழகு பார்ப்பது போன்ற வேலைகள்தான் கோவிந்த ராஜூவுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள்.

இதற்கிடையே, பொறியல் பட்டதாரியான கோவிந்தராஜூக்கு சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா விமான நிலையத்தில் வேலை கிடைத்தது. கௌரவமிக்க பணி... கை நிறைய சம்பளம் இனி கோவிந்தராஜூவின் வாழ்க்கை மாறி விடும் என்று அவரின் நண்பர்கள் கருதினர். ஆனால், கோவிந்தராஜூ சவுதி அரேபியா சென்ற பிறகு ஷியாமளாவின் நடவடிக்கைகளில் ஒருவித மாற்றம் ஏற்பட்டது. முறையாக சாப்பிடாமல் இனம் புரியாத சோகத்தில் அந்த யானை இருந்தது.

யானையின் நிலை குறித்து கோவிந்தராஜூவின் குடும்பத்தினர் அவரிடத்தில் தகவல் கூறினர். கோவிந்தராஜூவுக்கும் தன் செல்ல யானை மீதே நினைப்பு இருந்தது. இதனால், வேலையில் அவரின் மனம் ஒட்டவில்லை. தொடர்ந்து வேலையை உதறி தள்ளி விட்டு கடந்த 2018- ம் ஆண்டு கோவிந்தராஜூ மீண்டும் கும்பகோணம் திரும்பி தன் செல்ல யானையுடன் சேர்ந்து விட்டார். தற்போது, ஷியாமளா யானை மீண்டும் பழைய உற்சாகத்துக்கு திரும்பியுள்ளது.

தற்போது, 49 வயதான ஷியாமளாவை காவிரி ஆறும், அரசலாறும் சேரும் இடத்தில் காடு போன்ற சூழலில் வைத்து கோவிந்தராஜூ வளர்த்து வருகிறார். தினமும் ஆற்றில் உற்சாக குளியல் போடும் ஷியாமளா யானையும் கோவிந்த ராஜூவும் இப்போது பிரிவதே இல்லை.
பொதுவாக, வீட்டில் யானை வளர்ப்பவர்கள் அதை தனியால் நிகழ்ச்சிகளுக்கு அனுப்பி வருவாய் ஈட்டுவார்கள். ஆனால், கோவிந்தராஜூ குடும்பத்தினர் இந்த யானையை எந்த நிகழ்ச்சிகளுக்கு அனுப்புவதில்லை .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments