குருவியை காக்க கிராம மக்களின் பெருந்தன்மை..!

0 2631

சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் அருகே தெருவிளக்கு சுவிட்ச் பெட்டியில் முட்டைகளிட்டு அடைக்கலமான குருவியை தொல்லை செய்யக் கூடாது என்பதற்காக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தெருவிளக்கை பயன்படுத்தாமல் கிராம மக்கள் இருளில் வசித்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் அருகே சேதாம்பல் ஊராட்சிக்கு உட்பட்டது பொத்தகுடி கிராமம். இங்குள்ள தெரு ஒன்றில் 35 தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தெருவிளக்குகளை அணைக்கவும் ஒளிரவிடவும் பிரதான கம்பம் ஒன்றில் சுவிட்ச் பெட்டி உள்ளது. அவ்வூரைச் சேர்ந்த கருப்புராஜா என்பவர் தினமும் மாலையில் வந்து தெருவிளக்கை ஆன் செய்துவிட்டு, மீண்டும் காலையில் வந்து விளக்குகளை அணைத்துவிட்டுச் செல்வார்.

இந்த நிலையில், அந்த சுவிட்ச் பெட்டியில் ஒரு மாதத்துக்கு முன் கரிச்சான் குருவி ஒன்று கூடு கட்டி முட்டையிட்டுள்ளது. இதனைப் பார்த்த கருப்பு ராஜா, குருவியை தொல்லை செய்யக் கூடாது என்பதற்காக தெருவிளக்கை இயக்காமல் விட்டுள்ளார்.

ஊர் மக்களிடமும் இது குறித்து கூறியபோது குருவி குஞ்சு பொரித்து அங்கிருந்து வெளியேறும் வரை தெருவிளக்கை இயக்க வேண்டாம் என பெருந்தன்மையோடு சம்மதித்துள்ளனர். இதனையடுத்து கடந்த 30 நாட்களுக்கும் மேலாக தெருவிளக்கு வெளிச்சமின்றி பொத்தகுடி மக்கள் இருளில் வசித்து வருகின்றனர்.

வயலும் ஓடைகளும் கிணறுகளுமாய் காணப்படும் கிராமப் புறங்களில் அந்த மக்களோடு மக்களாக அவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் குருவிகள் பல்வேறு வகைகளில் உதவி செய்து வருகின்றன. செல்போன் டவர்களின் பெருக்கம் உள்ளிட்ட காரணங்களால் குருவிகள் அழிந்து வருவதாக கருத்து நிலவி வரும் இன்றைய காலகட்டத்தில், குருவிக்காய் உருகும் பொத்தகுடி கிராம மக்களின் செயல் பலரையும் நெகிழ வைத்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments