நாங்களும் ஆவோம்லா.... இந்தியாவில் எம்.எல்.ஏ ஆன ஆப்பிரிக்க வம்சாவளி!

0 3637

வழக்கமாக இந்திய வம்சவாளி மக்கள்தான் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் அரசியலில் குதித்து உயர் பதவியை அடைவார்கள். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மாலத்தீவு போன்ற நாடுகளில் இந்திய வம்சாவளி மக்கள் முக்கிய பதவிகளில் அமர்ந்துள்ளனர். சிங்கப்பூர் அதிபராக இருந்த எஸ். ஆர். நாதன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். இந்திய வம்சாவளியினர் வெளிநாடுகளில் பெரும் பதவியை அடைவது போல, இந்தியாவில் ஆப்ரிக்க வம்சாவளி சேர்ந்த ஒருவர் எம்.எல்.ஏ- வாகி அசத்தியுள்ளார்.

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகாவில் உத்தரகன்னடா, பெலகாவி மற்றும் தார்வாட் மாவட்டங்களில் ஆப்பிரிக்க வம்சாவளி மக்களான சித்தி இன மக்கள் குடியேறினர். போர்த்துக்கீசியர்கள் இவர்களை அடிமைகளாக இந்தியாவுக்கு கொண்டு வந்ததாக சொல்லப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் இவர்கள் பழங்குடியின மக்களாக கருதப்படுகின்றனர். கிழக்கு ஆப்ரிக்காவில் மொசம்பிக் அல்லது கென்யாவை பூர்விகமாக கொண்ட பாண்டு இன மக்களின் சந்நதியினர் இவர்கள் என்று நம்பப்படுகிறது. கர்நாடகா, மகாராஸ்டிரா , ஆந்திர மாநிலங்களில் பரவி வாழும் இந்த இன மக்களின் எண்ணிக்கை 50,000 முதல் 60,000 பேர் வரை இருக்கலாம்.

சித்தி சமூகத்தை சேர்ந்தவர் சாந்தாராமா பட்னா சித்தி என்பவர் சிறந்த சமூகசேவகர். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைத்து கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு வந்தார். மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க கர்நாடக அரசு அமைத்த சிறப்பு குழுவிலும் சாந்தாராம் இடம் பெற்றிருந்தார். சித்தி சமூகத்திலிருந்து முதன்முதலாக பட்டம் பெற்றவரும் இவர்தான். பி.ஏ. பொருளாதாரம் படித்த சந்தாராமுக்கு கர்நாடகாவில் ஆளும் பாரதிய ஜனதா அரசு மற்றோரு கௌரவத்தை அளித்துள்ளது. தற்போது, கர்நாடக மாநிலத்தின் நியமன எம்.எல்.ஏ- வாக சாந்தாராம்  நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறந்த சமூகசேவகர் என்ற அடிப்படையில் சாந்தாராமுக்கு எம்.எல்.ஏ பதவி வழங்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் கவர்னர் வாஜூபாய் வாலா சந்தாராமுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். உத்தரகன்னடா மாவட்டத்தில் ஹிட்டலஹல்லி என்ற கிராமத்தை சேர்ந்த சந்தாராமுக்கு தற்போது 55 வயதாகிறது. சித்தி சமூகத்திலிருந்து முதன்முதலாக எம்.எல்.ஏ ஆன பெருமையும் இவருக்கு கிடைத்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments