வானில் ஒரு விந்தை கங்கண சூரிய கிரகணம்

0 1969

பல ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் ஏற்படும் அரிய காட்சியான கங்கண சூரிய கிரகணம் உலகின் பல நாடுகளிலும், இந்தியாவில் வட மாநிலங்களிலும் முழுவதும் தென்பட்டது. தமிழகத்தில் பகுதியளவு கிரகணம் தெரிந்தது.

அமாவாசையன்று சூரியனுக்கும் புவிக்கும் நடுவே ஒரே நேர்க்கோட்டில் நிலவு வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.  இந்தியாவில் வட மாநிலங்களில் காலை 9.56 மணிக்குக் கிரகணம் தொடங்கியது.

நண்பகல் 12 மணிக்குக் கங்கணக் கிரகணம் முழு அளவை எட்டியது. அப்போது சூரியனின் நடுப்பகுதி மறைந்து அதன் விளிம்புப் பகுதி ஒளிப்பிழம்பான ஒரு வளையமாகக் காட்சியளித்தது. மும்பை, காந்திநகர், ஜெய்ப்பூர், டேராடூன் ஆகிய நகரங்களில் இருந்து சூரியக் கிரகணம் பற்றிய காட்சிகளும் படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இதேபோல் நேபாளம், தெற்குச் சீனா, பாகிஸ்தான், மேற்காசிய நாடுகள், ஐரோப்பாவின் சில நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் ஆகியவற்றிலும், ஆஸ்திரேலியாவிலும் பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் தீவுகளிலும்  சூரிய கிரகணம் தென்பட்டது

தமிழகத்தில் பகுதியளவு சூரிய கிரகணமே தென்பட்டது. சென்னையில் 10.22 மணிக்குச் சூரிய கிரகணம் தொடங்கியது. 11.58 மணிக்கு அதிக அளவாகச் சூரியனின் 34 விழுக்காடு பகுதி மறைந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வழங்கப்பட்ட சிறப்புக் கண்ணாடிகள் மூலம் கிரகணத்தைப் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் உள்ள தொலைநோக்கிகள் மூலம் படம்பிடித்த கிரகணக் காட்சிகள் யூடியூப், ஃபேஸ்புக் ஆகியவற்றின் வழியாக நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. கொடைக்கானல் மலைப் பகுதியில் 30 விழுக்காடு சூரிய கிரகணம் தென்பட்டது. இதைப் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியும், தெருக்களில் நின்ற படியும் சிறப்புக் கண்ணாடி மூலம் கண்டுகளித்தனர்.

திருச்சி, கோவை, சேலம் ஆகிய நகரங்களிலும் பொதுமக்கள் சிறப்புக் கண்ணாடி மூலம் கிரகணத்தைக் கண்டுகளித்தனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அறிவியல் கோளரங்கத்தில் கிரகணத்தைப் பார்க்க மாணவர்கள், பேராசிரியர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட சிறப்புக் கண்ணாடிகள் அணிந்து ஏராளமானோர் கிரகணத்தைப் பார்வையிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments