கங்கண சூரிய கிரகணம் ஒளி வளையமாகக் காட்சியளித்தது

0 3430

வானியலில் அரிய நிகழ்வான கங்கண சூரிய கிரகணம் இன்று நிகழ்ந்தது. வட இந்திய பகுதியில் முழுக் கிரகணம் தென்பட்ட நிலையில், தமிழகத்தில் பகுதியளவு சூரியக் கிரகணம் தென்பட்டது. 

அமாவாசை நாளில் சூரியனுக்கும் புவிக்கும் நடுவே ஒரே நேர்க்கோட்டில் நிலவு வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சூரியனை நிலவால் முழுமையாக மறைக்க இயலாமல் ஒரு வளையம் போலச் சூரியனின் வெளி விளிம்பு அதிகப்பட்சக் கிரகணத்தின்போது வெளித் தெரிவதைக் கங்கண சூரிய கிரகணம் என்கிறோம்.

இந்தக் கங்கண சூரிய கிரகணம் தான் இன்று ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான், உத்தரக்கண்ட், பஞ்சாப், அரியானா, டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கங்கண சூரிய கிரகணம் முழுவதும் தென்பட்டது.

இதேபோல் நேபாளம், தெற்குச் சீனா, பாகிஸ்தான், மேற்காசிய நாடுகள், ஐரோப்பாவின் சில நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் ஆகியவற்றிலும் சூரிய கிரகணம் தென்பட்டது. இந்தியாவில் காலை 9.56 மணிக்குப் பகுதியளவு கிரகணம் தென்பட்டது.

நண்பகல் 12 மணிக்குக் கங்கணக் கிரகணம் முழு அளவை எட்டியது. அப்போது சூரியனின் நடுப்பகுதி மறைந்து அதன் விளிம்புப் பகுதி ஒளிப்பிழம்பான ஒரு வளையமாகக் காட்சியளித்தது.

மும்பை, காந்திநகர், ஜெய்ப்பூர், டேராடூன் ஆகிய நகரங்களில் உள்ள கோளரங்கங்களில் இருந்து சூரியக் கிரகணம் பற்றிய காட்சிகளும் படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பகுதியளவு சூரிய கிரகணமே தென்பட்டது. சென்னையில் 10.22 மணிக்குச் சூரிய கிரகணம் தொடங்கியது. 11.58 மணிக்கு அதிக அளவாகச் சூரியனின் 34 விழுக்காடு பகுதி மறைந்தது. அதன்பின் 1.41 மணிக்குக் கிரகணம் முடிந்தது. சென்னையில் மொத்தமாக 3 மணி 19 நிமிடங்களுக்குக் கிரகணம் நீடித்தது. 

கன்னியாகுமரி மாவட்டத்திலும் பகுதியளவு சூரிய கிரகணம் தென்பட்டது. கள்ளியங்காடு, திருநந்திக்கரை ஆகிய ஊர்களில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சிறப்பு கண்ணாடி மூலமாகச் சூரிய கிரகணத்தைப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வீட்டின் மாடிகளில் போதிய இடைவெளி விட்டுச் சிறப்புக் கண்ணாடி மூலம் பொதுமக்கள் கிரகணத்தைக் கண்டுகளித்தனர். 

திருநெல்வேலியில் பகுதியளவு சூரிய கிரகணம் காலை 10:15 முதல் மதியம் 13:15 மணி வரை தென்பட்டது. சூரிய கிரகணத்தை அனைவரும் காண்பதற்காக மாவட்ட அறிவியல் மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அங்குள்ள தொலைநோக்கிகள் மூலம் படம்பிடித்த காட்சிகள் யூடியூப், ஃபேஸ்புக் ஆகியவற்றின் வழியாக நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. 

மதுரையில் பத்தேகால் மணிக்குக் கிரகணம் தொடங்கியது. அதிக அளவாக 26 விழுக்காடு கிரகணம் தென்பட்டது. கிரகணத்தையொட்டி மதுரை மீனாட்சியம்மன் கோவில், அழகர்கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், பழமுதிர்ச்சோலை முருகன் கோவில் ஆகியவை சாத்தப்பட்டிருந்தன. 

கொடைக்கானல் மலைப் பகுதியில் 30 விழுக்காடு நெருப்பு வளைய சூரியகிரகணம் தென்பட்டது. இதைப் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியும்,  தெருக்களில் நின்ற படியும் சிறப்புக் கண்ணாடி மூலம் கண்டுகளித்தனர்.

திருச்சியில் 10.28 மணிக்குத் தொடங்கிய பகுதியளவு சூரிய கிரகணம் படிப்படியாக அதிகரித்து 11.42க்கு உச்சம் பெற்றது. அப்போது அதிக அளவாகச் சூரியனின் 33 விழுக்காடு அளவு நிலவால் மறைக்கப்பட்டது.

கோவையில் 10.12 மணிக்குத் தொடங்கிய சூரிய கிரகணம் 1:23 மணிக்கு நிறைவடைந்தது. கோவையில் சரியாக 11.58 மணிக்கு அதிகப்பட்சமாக 30 விழுக்காடு சூரிய கிரகணம் தென்பட்டது. வீடுகளில் சிறப்புக் கண்ணாடிகளைக் கொண்டு சூரிய கிரகணத்தைப் பார்த்தனர்.

கிரகணத்தைப் பார்க்க சேலம் இரும்பாலையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தொலைநோக்கி மூலம் சூரிய ஒளியைப் பாய்ச்சி அதன் பிம்பத்தைப் பொதுமக்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

புதுச்சேரியில் காலை 10.21 மணிக்குச் சூரிய கிரகணம் தொடங்கியது. 11.56 மணிக்கு அதிக அளவாக 33 விழுக்காடு கிரகணம் நிகழ்ந்தது. கிரகணத்தைப் பார்க்கப் புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அறிவியல் கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கங்கண சூரிய கிரகணத்தை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட சிறப்புக் கண்ணாடிகள் அணிந்து ஏராளமானோர் பார்வையிட்டனர். 30 விழுக்காடு சூரியன் மறைவதைக் கண்டுகளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments