தமிழகத்துக்கு நிதி வழங்க வேண்டும்.. பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை..!

0 2583

தமிழகத்தில் மருத்துவக் கருவிகள் வாங்க மூவாயிரம் கோடி ரூபாயும், கொரோனா தடுப்பு, பொருளாதாரச் சீரமைப்பு ஆகியவற்றுக்கு ஒன்பதாயிரம் கோடி ரூபாயும் வழங்க வேண்டும் எனப் பிரதமர் மோடியிடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் காணொலியில் கலந்துரையாடினார். அப்போது பேசிய முதலமைச்சர், தமிழகத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்த சென்னை மாநகரம் மற்றும் அண்டை மாவட்டங்களில் ஜூன் 19 முதல் 30 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

மாநிலத்தில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் ஒன்று புள்ளி பூஜ்யம் ஒன்பது விழுக்காடாகவும், குணமடைந்தோரின் விகிதம் 55 புள்ளி 8 விழுக்காடாகவும் உள்ளதாகத் தெரிவித்தார். கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் 17 ஆயிரத்து 500 கூடுதல் படுக்கைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக மருத்துவர்கள் செவிலியர்கள், நலவாழ்வுத்துறைப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மருத்துவக் கருவிகள் வாங்க மூவாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கவும், தேசிய நலவாழ்வுத் திட்டத்தின் கீழ் இரண்டாவது தவணை நிதியை விடுவிக்கவும் வலியுறுத்தினார்.

கொரோனா தடுப்புக்கும், பொருளாதாரப் பாதிப்பைச் சரிசெய்யவும் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். சரக்கு சேவை நடைமுறைப்படுத்தியதற்கு இழப்பீட்டுத் தொகையை விடுவிக்கவும்,
உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதிக்குழு மானியத் தொகையில் ஐம்பது விழுக்காட்டை விடுவிக்கவும் வலியுறுத்தினார்.

கொரோனா பெருந்தொற்றை எதிர்த்துப் போராடத் தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

நெல் கொள்முதலுக்கு வசதியாக மத்திய அரசு வழங்க வேண்டிய ஆயிரத்து 321 கோடி ரூபாய் மானியத் தொகையை விடுவிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு தொழில்முதலீட்டுக் கழகத்துக்குச் சிறுதொழில் வளர்ச்சி வங்கி மூலம் ஆயிரம் கோடி ரூபாய் மறு நிதியளிப்புக் கடனாக வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

சீன எல்லையில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்ததைக் குறிப்பிட்ட முதலமைச்சர், மாநில அரசு மத்திய அரசுக்கு உறுதுணையாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments