நாங்க மன்னிப்பு கேட்காத ஏரியாவே இல்லை..! ஆட்டுகிடா பாய்ஸ் அப்பாலஜி..!

0 3341

ஆட்டுகிடா பந்தயத்தில் ஈடுபட்டு போலீசிடம் சிக்கிய இளைஞர்கள், அபராதம் செலுத்திவிட்டு வெளியில் வந்த நிலையில் ஜெயில் கட்டியதே தங்களுக்குத்தான் என்று டிக்டாக் வெளியிட்டதால் காவல் நிலையம் முன்பு மன்னிப்பு கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மதுரையை அடுத்த நாகமலை புதுக்கோட்டையில் ஊரடங்கா அது எங்கே இருக்கின்றது? என்பது போல ஏராளமான இளைஞர்கள் முககவசம் இல்லாமல் கூடி ஆட்டுகிடா சண்டை பந்தயத்தை நடத்தினர்.

தடையை மீறி நடந்த பந்தயத்தில் இரு செம்மறி ஆடுகளை மோதவிட்டு 15 மோதல்களுக்கு மேல் தாக்கு பிடித்து நிற்கும் ஆடு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என கூறப்பட்டது. இதனால் விறு விறுப்பாக நடந்த ஆட்டுக்கிடா சண்டையை ஏராளமானோர் மெய்மறந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

முடிவில் அதில் வெற்றி பெற்ற ஆட்டுகிடாவுடன் 5 இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் வெற்றி பெற்ற ஆட்டுகிடாவுடன் ஆட்டம் போட்ட 5 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர். இவர்கள் அனைவரும் படித்த இளைஞர்கள் என்பதால் மன்னிப்பு கேட்டனர். இதையடுத்து அவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து எச்சரித்து வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.

இளைஞர்கள் ஆட்டுக்கிடாவுடன் காவல் நிலையத்தில் இருந்து வெளியில் வந்தவுடன், வீடியோ எடுத்த, உடன் வந்த சிறுவர்கள், தங்கள் அண்ணன்மார்கள் எப்போதும் கெத்து என்பதை காட்டுவதற்காக, ஜெயில் கட்டி விட்டதே இவர்களுக்கு தான் என்பது போல, டிக்டாக்கில் அந்த வீடியோவை பதிவிட்டதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து, மன்னித்துவிடப்பட்ட 5 பேரையும், மீண்டும் காவல் நிலையத்துக்கு தூக்கிச்சென்றனர் காவல்துறையினர். அந்த முறை முகக்வசத்துடன் காணப்பட்ட அந்த இளைஞர்கள், இப்படி ஒரு டிக்டாக் வீடியோ எடுத்ததே தங்களுக்கு தெரியாது என்று காவல்துறையினரிடம் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டனர். அவர்கள் படித்த இளைஞர்கள் என்பதால் எதிர்காலம் கருதி அவர்களை மீண்டும் எச்சரித்து அனுப்பினர்.

டிக்டாக்கில் கெத்துக்காட்டிய இளைஞர்கள், அதே காவல் நிலைய வாசலில் நின்று மன்னிப்புக்கேட்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டனர்.

போலீஸ் நிலையத்தில் நின்றோ, போலீஸ் வாகனத்தில் நின்றோ வீடியோ எடுத்து டிக்டாக்கில் பதிவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள காவல்துறையினர்,  டிக்டாக்கில் நவரசங்களை காட்டும் நாயகர்கள் , தங்கள் ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டு இருப்பது அவர்களுக்கும் எதிர்காலத்திற்கும் நலம் பயக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments