'மோதிக்கொள்ளும் டிராகன் - கங்காரு...' தொடங்கியது வர்த்தகப் போர்? காரணம் என்ன?

0 6126

சீனாவின் உகான் மாகாணத்திலிருந்து பரவத் தொடங்கிய கோரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 7.3 மில்லியனுக்கும் அதிகமான பேருக்குப்  பரவியிருக்கும் கோரோனா நோய் தொற்றால் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். இந்த நோய்த் தொற்று பரவலுக்குச் சீனாதான் காரணம் என்று அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் தொடக்கத்திலிருந்தே குற்றம் சாட்டி வருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரடியாகவே கொரோனா வைரசை 'சீனா வைரஸ்' என்று குற்றம் சாட்டி வருகிறார். அதை சீனா தொடர்ந்து மறுத்தும் கண்டித்தும் வருகிறது.

image

உலகின்  கொரோனா பழியிலிருந்து தப்பித்துக்கொள்ள சீனா அனைத்து வழிகளிலும் தனது அதிகாரத்தையும் வலிமையையும் பயன்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தொடர்பான ஆதாரத்தை அழித்தல், தோற்று நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கூறுதல், குற்றம் சாட்டும் நாடுகளை மிரட்டுதல் என்று தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது சீனா.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அரசு, "கொரோனா தொற்று நோய் விவகாரத்தில், சீனா அலட்சியமாகச் செயல்பட்டதன் விளைவைத் தான், இன்று உலகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. நோய்த் தொற்று பரவலுக்குச் சீனா தான் காரணம். இது தொடர்பாக, சர்வதேச விசாரணை அவசியம் தேவை” என்று வலியுறுத்தியது. ஆஸ்திரேலியாவில் கொரோனா நோய்த் தொற்றால் ஏழாயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு சுமார் 102 பேர் இறந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

image

ஏற்கெனவே தென்சீனக் கடல் விவகாரத்தில் சீனாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் பிரச்னை இருந்து வருகிறது. தென் சீனக் கடலில் வியட்நாம், பிலிப்பைன்சுக்கு சொந்தமான தீவுகளைச் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த முயற்சிக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றன.  உலகக் கடல் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கு தென் சீனக்கடல் வழியாகதான் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் வர்த்தகம் 253 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு தென்சீனக் கடல் வழியாகத்தான்  நடைபெறுகிறது. மேலும் அங்குக் கடலுக்கு அடியில் எண்ணெய், இயற்கை எரிவாயு உள்ளிட்ட ஏராளமான வளங்கள் அதிக அளவில் இருக்கின்றன.இதன் காரணமாகவே, தென்சீனக் கடலில் சீனா ஆதிக்கம் செலுத்த முயன்று வருகிறது.

கொரோனா விவகாரத்தில், சர்வதேச விசாரணை தேவை என்று ஆஸ்திரேலியா கூறியது தான் தாமதம் உடனே  சீனா தன் எதிர் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த விவகாரத்தில் வர்த்தகப் போர் மூண்டிருக்கிறது. கொரோனா விவகாரத்தால் கடுப்பாகிப் போன சீனா ஆஸ்திரேலியாவிலிருந்து மாட்டு இறைச்சி இறக்குமதிக்கு முற்றிலும் தடை விதித்து. பார்லி இறக்குமதிக்கு ஏகத்துக்கும் வரியை உயர்த்தியிருக்கிறது. சீனா, - ஆஸ்திரேலியா இடையே, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மூலம், ஆண்டொன்றுக்கு, 18 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, வர்த்தகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 

இத்தோடு நில்லாமல், சீன அரசு, 'ஆஸ்திரேலியாவில் கல்வி பயிலும் சீன மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக இனவெறி தாக்குதல் நடக்கக்கூடும். அங்குச் சென்று கல்வி பயில நினைக்கும் மாணவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். சீன சுற்றுலாப் பயணிகள் ஆஸ்திரேலியாவுக்குச் செல்வத்தையும் தவிர்க்க வேண்டும்" என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளிலிருந்து கல்வி பயில வரும் மாணவர்கள் மூலம் ஆஸ்திரேலியா 26 பில்லியன் டாலர் அளவுக்கு வருவாய் ஈட்டி வருகிறது.

image

இந்த எச்சரிக்கைக்கு ஆஸ்திரேலியா தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருப்பதோடு மட்டுமல்லாமல் நிராகரிக்கவும் செய்திருக்கிறது. சீனாவின் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலியா பிரதமர், ஸ்காட் மோரிசன், ''சீனாவின் தேவையற்ற மிரட்டல் மற்றும் வற்புறுத்தல்களுக்கு ஒருபோதும் நாங்கள் அடிபணிய மாட்டோம். இந்த விவகாரத்தில் எங்கள் மதிப்பையும்  நாங்கள் விற்கத் தயாராக இல்லை'' என்று காட்டமாகப் பதில் அளித்திருக்கிறார்.

ஏற்கெனவே தென்சீனக் கடல் விவகாரத்தில் ஆஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பனிப்போர் நிகழ்ந்துவரும் சூழலில் கொரோனா விவகாரம் வர்த்தகப் போரைத் தொடக்கி வைத்திருக்கிறது. இந்த வர்த்தகப் போர் எதுவரை நீளப்போகிறது  என்பது போகப்போகத் தான் தெரியும்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments