இந்தியாவில் மேலும் 9,987 பேருக்கு கொரோனா.. பாதிப்பு 2.66 லட்சத்தை கடந்தது..!

0 1600

நாடு முழுவதும் ஒரே நாளில் 9 ஆயிரத்து 987 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 66 ஆயிரத்தை கடந்துள்ளது

நாட்டில் கடந்த சில நாள்களாக நாள்தோறும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியாகி வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும் 9 ஆயிரத்து 987 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவுக்கு மேலும் 331 பேர் பலியாகியுள்ளனர்.

நாட்டில் மிகவும் அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு பதிவாகியிருப்பது இதுவே முதல்முறை ஆகும். இதனால் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 66 ஆயிரத்து 598ஆகவும், கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 466ஆகவும் அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவமனைகளில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 917 பேர் சிகிச்சை பெறும் நிலையில், 1 லட்சத்து 29 ஆயிரத்து 215 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் அத்தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 88 ஆயிரத்து 528ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 169ஆகவும் அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவுக்கு அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களான தமிழகத்தில் 33 ஆயிரத்து 229ஆகவும், டெல்லியில் 29 ஆயிரத்து 943 ஆகவும், குஜராத்தில் 20 ஆயிரத்து 545 ஆகவும் உயர்ந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் 10 ஆயிரத்து 947 பேருக்கும், ராஜஸ்தானில் 10 ஆயிரத்து 763 பேருக்கும் கொரோனா இதுவரை உறுதியாகியுள்ளது. இதேபோல் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கையும், பலியானோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments