நிறவெறி, இனவெறிக்கு எதிராக.. உலகளாவிய போராட்டம்..!

0 1266

அமெரிக்காவில் தொடங்கிய இனவெறிக்கு எதிரான போராட்டம் ஐரோப்பிய நாடுகளைத் தாண்டி பிரேசில், ஆஸ்திரேலியா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. லண்டனில் 125 ஆண்டுகால சிலையை போராட்டக்காரர்கள் உடைத்து ஆற்றில் வீசிஎறிந்தனர்.

அமெரிக்காவின் மின்னசொட்டா மாகாணத்தில் கருப்பின இளைஞரான ஜார்ஜ் ஃப்ளாயிட் என்பவரை போலீசார் கழுத்தில் மிதித்துக் கொன்றதைத் தொடர்ந்து மக்கள் வெகுண்டெழுந்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதலும், வன்முறையும் நடந்து வருகிறது. ஜார்ஜ் ஃப்ளாயிட் மரணத்திற்கு நீதி கேட்டு வாஷிங்டன், நியூயார்க், அட்லாண்டா, ஃபிலடெல்பியா, சிகாகோ, லாஸ் ஏஞ்சலிஸ், சான் பிரான்சிஸ்கோ, பாஸ்டன், மியாமி உள்ளிட்ட நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இங்கிலாந்திலும் நிறவெறிக்கு எதிரான போராட்டம் வெடித்துள்ளது. லண்டனில் உள்ள முன்னாள் பிரதமர் வின்ஸ்டன்ட் சர்ச்சிலின் நினைவுச் சின்னம் மீது இனவெறி என்று போராட்டக்காரர்கள் எழுதிவைத்தனர். அங்குள்ள காந்தி மற்றும் ஆப்ரஹாம் லிங்கன் சிலைகளிலும் இனவெறிக்கு எதிரான பதாகைகள் வைக்கப்பட்டன.

இங்கிலாந்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அடிமை வர்த்தகத்தில் கொடி கட்டிப் பறந்தவருமான எட்வர்ட் கால்ஸ்டனின் (Edward Colston) சிலையை, ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். பின்னர் அவரது சிலையை போராட்டக்காரர்கள் ஆற்றில் தூக்கி வீசினர்.

லண்டன் பேரணியில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. இதன் காரணமாக போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்.

போலீஸ் தாக்குதலில் கருப்பின நபர் ஜார்ஜ் பிளாய்ட் உயிரிழந்ததைக் கண்டித்து ஹாங்காங்கில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு  ஏராளமானோர் கொட்டும் மழைக்கு இடையே போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

தென்கொரிய தலைநகர் சியோலில் இனவெறி மற்றும் போலீசின் கண்மூடித்தனமாக தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து பேரணி சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் கலவரம் மூண்டது.

நிறவெறி மற்றும் இனவெறிக்கு எதிராக தென் அமெரிக்க நாடான பிரேசிலில் நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். வீதிகளில் திரண்ட அவர்கள் நிறவெறிக்கு எதிராக பதாகைகளை கைகளில் ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியும் பேரணியாகச் சென்றனர்.

ஆஸ்திரேலியாவில் ஒன்றிணைந்த மக்கள் அங்குள்ள பூங்காவில் முழங்காலிட்டு போராட்டம் நடத்தினர்.

ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

நிறவெறி மற்றும் இனவெறிக்கு எதிரான பேராட்டம் அமெரிக்கக் கண்டத்தில் தொடங்கி தற்போது, ஐரோப்பா, ஆசியா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா என 5 கண்டங்களிலும் வெடித்துப் பரவி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments