டிரம்புக்கு எதிராக களம் காணும் ஜோ பிடன்..!

0 1923

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் யார் என்ற போட்டியில், ஜோ பிடன் வெற்றிபெற்றுள்ளார். நவம்பர் மாதம் நடைபெற உள்ள தேர்தலில் பிடன், தற்போதைய அதிபர் டிரம்பை எதிர்த்து போட்டியிடுவார்.

வரும் நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில், ஆளும் குடியரசுக் கட்சி சார்பில், தற்போது அதிபராக உள்ள டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சியின் சார்பில் வேட்பாளராக களமிறங்க தொடக்கத்தில் பலமுனைப் போட்டி இருந்தது. அதிபராக ஒபாமா இருந்தபோது, துணை அதிபராக இருந்த ஜோ பிடனுக்கும், பெர்னி சாண்டர்சுக்கும் இடையே கடும் போட்டியாக பின்னர் உருவெடுத்தது.

கடந்த ஏப்ரலில் பெர்னி சாண்டர்ஸ் இந்த போட்டியில் இருந்து விலகினார். இந்நிலையில், ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளரை தேர்வு செய்ய மாநிலந்தோறும் நடைபெற்ற பிரைமரி தேர்தல்களில் இதுவரை, 1,991 பிரதிநிதிகளின் ஆதரவை ஜோ பிடன் வென்றுள்ளார்.

இன்னும் 8 மாநிலங்களிலும் 3 பிரதேசங்களிலும் பிரைமரி தேர்தல் நடைபெற வேண்டியிருந்தாலும், அதிபர் வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு தேவையான பிரதிநிதிகள் ஆதரவு எண்ணிக்கையை ஜோ பிடன் பெற்றுள்ளார். இதையடுத்து, அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கான போட்டியில், ஜோ பிடன் வெற்றிபெற்றுள்ளார்.

77 வயதான ஜோ பிடன், 1988 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளிலும், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஆவதற்கு போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். தற்போது மூன்றாவது முறையாக போட்டியிட்டு, வெற்றிக் கனியை எட்டிப் பறித்துள்ளார்.

கருப்பினத்தவர்களிடையே வலுவான ஆதரவு இருப்பது ஜோ பிடன் வெற்றிக்கு காரணமாகக் கூறப்படுகிறது. 36 ஆண்டுகள் செனட் சபை உறுப்பினராக இருந்த ஜோ பிடன், 2009ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி வரை, அமெரிக்காவின் துணை அதிபராக பதவி வகித்தவர்.

கடந்த ஏப்ரலில் போட்டியில் இருந்து பெர்னி சாண்டர்ஸ் விலகிய பிறகு, ஜனநாயகக் கட்சியின் தலைவர் நிலையில் இருந்து வருகிறார். வரும் நவம்பரில் அதிபர் தேர்தலில் டிரம்பை எதிர்த்துக் களம் காணும் ஜோ பிடனுக்கு, தற்போதைய கருப்பினத்தவரின் எழுச்சி சாதகமாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments