அடகுக் கடை உரிமையாளர் கடத்திக் கொலை..!

0 699

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே அடகுக் கடை உரிமையாளரை கடத்திக் கொன்று புதைத்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பொட்டி நாயுடு தெருவைச் சேர்ந்த அசோக சக்கரவர்த்தி என்பவர், தேசூரில் அடகு கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 25ஆம் தேதி தனது கடைக்கு எதிரில் மற்றொரு அடகுக் கடை நடத்தி வரும் நண்பரை செல்போனில் தொடர்பு கொண்டு, தாம் அனுப்பும் நபரிடம் ஒன்றரை லட்சம் ரூபாய் தரும்படி கூறியுள்ளார்.

அதன்படி பணம் கொடுக்கப்பட்ட நிலையில், சிறிது நேரம் கழித்து மீண்டும் தனது மனைவியை தொடர்புகொண்டு தாம் அனுப்பும் நபரிடம் 2 லட்சம் ரூபாய் தரும்படி கூறியுள்ளார். பின்னர் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில், ஒரு வாரமாக வீடு திரும்பாததால் பணத்திற்காக அவர் கடத்தப்பட்டாரா ? என போலீசார் விசாரணையை முன்னேடுத்தனர்.

கடைசியாக செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட பகுதி வழியாக சென்ற வாகன நடமாட்டம் குறித்து சிசிடிவி கேமராக்கள் மூலம் ஆய்வு செய்த போலீசார், வாகன எண் பலகை இன்றி சென்ற காரை வைத்து துப்பு துலக்கி மொலப்பட்டைச் சேர்ந்த பாஜக பிரமுகர் திருநாவுக்கரசு அவரது கூட்டாளிகள் முருகன் மற்றும் கவியரசு ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அசோக சக்கரவர்த்தியை கடத்திக் கொலை செய்து புதைத்தது தெரியவந்தது.

உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் பாஜக பிரமுகரான திருநாவுக்கரசுவின் மனைவி தேர்தலில் போட்டியிட்டுள்ளார். இதற்கான செலவுக்காக அசோக சக்கரவர்த்தியிடம் நகைகளை அடகு வைத்து இரண்டரை லட்சம் ரூபாய் பெற்ற திருநாவுக்கரசு, பின்னர் நகைகளை மீட்க வட்டியுடன் இரண்டரை லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். ஆனால் நகைகளை அசோக சக்கரவர்த்தி திரும்ப கொடுக்காமல் நீண்ட நாட்களாக அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த திருநாவுக்கரசு தனது கூட்டாளிகளுடன் சம்பவத்தன்று அசோக சக்கரவர்த்தியை காரில் கடத்தி சென்று மிரட்டி, அவரது நண்பர் மற்றும் மனைவி மூலம் பணத்தை பறித்ததாகக் கூறப்படுகிறது. அடகு கடையில் இருந்த நகைகளையும் மிரட்டி வாங்கியுள்ளார்.

அதன்பின்னர் அசோக சக்கரவர்த்தி போலீசாரிடம் தங்களை போட்டுக்கொடுத்துவிடுவார் என்ற அச்சத்தில், அவரை தாக்கி கொன்று தைலமரக்காட்டில் புதைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். அவர்களிடம் இருந்து 16 சவரன் நகைகள், அரை கிலோ வெள்ளி, 2 லட்சத்து 80 ஆயிரம் பணம், கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. கொலையில் தொடர்புடைய 2வது முக்கிய நபரை தேடப்பட்டு வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments