மனைவிக்கு சூடுவைத்து கூட்டு பலாத்காரம் செய்த கொடூர குடிகார கணவன்..! கடவுளின் தேசத்தில் கயவர்கள் அட்டூழியம்

0 6017

கடற்கரைக்கு அழைத்து செல்வதாக ஏமாற்றி மனைவியை நண்பர்கள் வீட்டுக்கு அழைத்துச்சென்று கூட்டுபாலியல் பலாத்காரம் செய்த கொடூர கணவன் உள்ளிட்ட 6 பேர் கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். 

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அடுத்த கடினங்குளம் என்ற இடத்தை சேர்ந்த போதைக்கு அடிமையான கணவன், தனது மனைவி மற்றும் மகனை கடற்கரைக்கு அழைத்துப் செல்கிறேன் என்று வீட்டில் இருந்து வெளியே அழைத்து சென்றுள்ளார்.

ஆனால் கடற்கரைக்கு செல்லாமல் தனது நண்பனின் வீட்டுக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகின்றது. அங்கு நடந்த விருந்து நிகழ்ச்சியில் மனைவிக்கு கட்டாயப்படுத்தி மதுவை ஊற்றிக் கொடுத்த கணவன், தனது கூட்டாளிகள் 6 பேருடன் சேர்ந்து, புதுக்குறிச்சியில் உள்ள பத்து ஏக்கர் பண்ணை வீட்டிற்கு தூக்கிச்சென்றதாக சொல்லப்படுகிறது.

5 வயது மகன் உடன் இருப்பதை பற்றி சிறிதும் யோசிக்காமல் அந்த கொடூர கும்பல் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளது. அதனை தடுக்க முயன்ற சிறுவனையும் அடித்து துன்புறுத்தி வெளியே வீசியுள்ளனர். ஒருகட்டத்தில் அந்த பெண்ணின் உடலில் சிகரெட்டால் சூடு வைத்தும் சித்ரவதை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

நீண்ட போராட்டத்திற்கு பின்னர் போதையில் தள்ளாடிய அந்த கொடூர கும்பலிடம் இருந்து தப்பிய அந்த பெண், தனது மகனுடன் சாலைக்கு வந்து, அந்த வழியாக சென்ற கார் ஒன்றை மறித்து அதில் வந்தவர்களிடம் உதவி கேட்டுள்ளார்.

கிழிந்த மேலாடையுடன் பரிதாபமாக காட்சியளித்த அந்தப் பெண்ணை கண்டவர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து சென்ற போலீசார் போதைக்கு அடிமையானதால் கொடூர செயலில் ஈடுபட்ட கணவன் உள்ளிட்ட 6 காமுகர்களையும் கைவிலங்கு பூட்டி கைது செய்தனர்

விசாரணையில் அந்த பெண்ணின் கணவன் மட்டுமல்லாமல் அவனது கூட்டாளிகள் அனைவருக்கும் கிரிமினல் பின்னணி இருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

சிறுவனை அடித்து துன்புறுத்தியதால் கொடூரர்கள் மீது போக்ஸ்சோ உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக திருவனந்தபுரம் ரூரல் எஸ்.பி. அசோக் குமார் தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணை முடியும் வரை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று மாநில மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த கூட்டு பாலியல் சம்பவம் கடவுளின் தேசம் என கூறிக்கொள்ளும் கேரளத்தை கடும் கலக்கத்திற்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது.

அண்மையில் அன்னாசி பழத்துக்குள் வெடிவைத்து கர்ப்பமான யானையை கொன்ற கொடூரர்களை தொடர்ந்து, பெற்ற மகன் முன்னே கணவனுடன் சேர்ந்து பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்திருக்கும் சம்பவம் மனிதாபிமானமற்ற செயலின் உச்சகட்டமாக பார்க்கப்படுகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments