தனி நபர் இடைவெளியா..? ரிச்சி தெருவில் இல்லை..! உஷாராகுமா மாநகராட்சி

0 2035

சென்னையில் எலெக்ட்ரானிக் பொருட்களின் சந்தையாக விளங்கும் ரிச்சி தெருவில் கடுமையான கட்டுப்பாடுகளுடன், பகுதியளவுக்கு கடைகள் மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் தனிநபர் இடைவெளி குறித்த விழிப்புணர்வு இன்றி ஒன்று கூடும் மக்களால் புதிதாக கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது..

சென்னையின் மிகப்பேரிய எலெக்ட்ரானிக் சந்தை என்ற பெயரை பெற்ற ரிச்சி தெருவில் செல்போன், ஸ்மார்ட் டிவி, சிசிடிவி காமிரா, விற்பனையகங்கள் செல்போன் பழுது நீக்கும் கடைகள் என 50 சதுரஅடி முதல் 100 சதுரஅடிக்குள் நூற்றுக்கணக்கான கடைகள் இயங்கி வருகின்றன.

விலைக்குறைவு, பேரம் பேசி வாங்கலாம் என்பதால் சாதாரண நாட்களிலேயே கூட்ட நெரிசல் முண்டியடிக்கும் நிலையில் உள்ள ரிச்சி தெருவில் 3 மாத இடைவெளிக்கு பின்னர் கடைகளை திறக்க கடும் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலை தவிர்க்கவும் தனி நபர் இடைவெளியை கடைபிடிக்கும் வகையிலும் ஒரு பகுதி கடைகள் குறிப்பிட்ட 3 நாட்கள் என்றும், மீதம் உள்ள கடைகள் அடுத்த 3 நாட்கள் திறக்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனால் திறந்துள்ள ஒருபகுதி கடைகளிலும் மக்கள் கூட்டம் கோயம்பேடு மார்க்கெட் போல அலைமோத தொடங்கியுள்ளது.

பெரும்பாலான பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதால் புதிதாக குறைந்த விலையில் பேரம் பேசி ஸ்மார்ட் போன்கள் வாங்குவதற்காக, அங்குள்ள சின்னகடைகளில் தனி நபர் இடைவெளியை பின் பற்றாமல் மக்கள் முண்டியடிப்பதை காணமுடிகின்றது.

செல்போன் பழுது நீக்கும் கடைகள் மீன் மார்க்கெட் போல காட்சி அளிக்கின்றது. சாதாரணா நாள் போல் இல்லாமல் ரிச்சி தெருவில் எலக்ட்ரானிக் பொருட்களை வாங்குவதற்கு திருவிழா போல மக்கள் வந்து செல்கின்றனர். இதில் சிலர் முககவசம் கூட அணியாமல் மெத்தனமாக வந்து செல்கின்றனர்.

இங்குவரும் மக்கள் தங்கள் வாகனங்களை அண்ணாசாலையின் ஒரு பகுதியில் நிறுத்தி விட்டு ரிச்சி தெருவுக்குள் செல்வதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றது.

அதே நேரத்தில் வேகமாக கொரோனா பரவிவரும் சென்னையில் சமூக விலகலை மறந்து இங்கு திரளும் பெருங்கூட்டத்தால் புதிதாக கொரோனா பெருந்தொற்றுக்கு வழிவகுத்து விடக்கூடாது என்பதால் அதிகாரிகள் சமூக இடைவெளியுடன் சென்று பொருட்களை வாங்கிச்செல்லும் வகையில் மக்கள் கூட்டத்தை முறைப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

விலைகுறைவு என்று ரிச்சி தெருவில் முண்டியடித்து செல்போனுடன் சேர்த்து கொரோனாவையும் வாங்கிச்சென்றால் தற்போதைய சூழலில் சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனையில் போதிய இடமில்லை..!

தனியார் மருத்துவமனை பக்கம் போனால் லட்சங்களை கறந்துவிடுவார்கள்..! என்பதை உணர்ந்தாவது பொது இடங்களில் சமூக இடைவெளியையும், நெரிசலான இடங்களில் தனி நபர் இடைவெளியையும் சுயமாக கடைபிடிப்பதே சாலசிறந்தது...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments