7வது நாளாக தணியாத போராட்டம்.. மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்..!

0 13347

கருப்பின இளைஞரின் மரணத்துக்கு நீதி கேட்டு 7வது நாளாக அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்துள்ளது. பல இடங்களில் நடந்த அமைதி போராட்டத்தில் போலீசார் மண்டியிட்டு தங்கள் ஆதரவை அளித்து நெகிழ்ச்சி ஏற்படுத்தினர்.

அமெரிக்காவின் மின்னாபொலீஸ் நகரில் போலீஸ் அதிகாரியின் முட்டிக்கு கீழ் சிக்கி உயிரிழந்த கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டுக்கு நீதி கோரியும், இனபாகுபாட்டுக்கு எதிராகவும் 7வது நாளாக தணியாத கோபத்துடன் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீதிகளில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் ஈடுபடுவதால் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் டென்வர் நகரில் அரசு கட்டிடத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் மண்டியிட்டு அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட் பவுல்வர்டு,பிலடெல்பியா உள்ளிட்ட இடங்களில் பேரணியாக சென்று தங்கள் கண்டனத்தை வெளிபடுத்தினர்.வாஷிங்டன் நகரில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்த நிலையிலும் ஆர்பாட்டங்கள் தொடர்ந்தன.

ஜார்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக நியூயார்க் நகரத்தின் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடம் விளக்குகள் இன்றி காட்சியளித்தது.

அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கானோரை கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் அப்புறப்படுத்தினர்.

இதனிடையே கலிஃபோர்னியாவின் ஓக்லி மற்றும் ப்ரெண்ட்வுட் உள்ளிட்ட நகரங்களில் இனபாகுபாட்டிற்கு எதிராக நடந்த அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு பங்கேற்று போலீசார் தங்கள் ஆதரவை தெரிவித்த நிகழ்வும் அரங்கேறியது.போலீசாரின் இந்த செயலுக்கு ஆரவாரம் செய்து போராட்டக்காரர்கள் வரவேற்பளித்தனர்.

இதற்கிடையே,வெள்ளை மாளிகை அருகே நடந்த போராட்டத்தில் தீவைக்கப்பட்ட செயின்ட் ஜான்ஸ் எபிஸ்கோபல் தேவாலயத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் நடந்து சென்று பார்வையிட்டார்.

ஆப்பிரிக்க அமெரிக்கர் ஜார்ஜ் பிளாய்ட்டின் மரணத்துக்கு நீதி கோரி அமெரிக்கா மட்டுமின்றி இங்கிலாந்து, ஜெர்மனி, நியூசிலாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் போராட்டம் வெடித்த நிலையில் ஆஸ்திரேலியாவிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதனால் அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது.

நியூயார்க் நகரில் நடந்த பேரணிக்கு இடையே கடைகள் பல சூறையாடப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. ஜார்ஜ் பிளாய்ட் மரணத்துக்கு நீதி கோரி  மன்ஹாட்டன் கடை வீதிகளில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதில் இருந்து பிரிந்து சென்ற சிலர், மேசி, நைக் உள்ளிட்ட ஆடம்பர விற்பனை நிலையங்களில் புகுந்து பொருட்களை திருடிச் சென்றனர். மேலும், ஏராளமான கடைகள் தாக்கப்பட்டதாகவும், இதையடுத்து பலர் கைது செய்யப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments