கொரோனா தனிமை.. 11 மாத ஆண்குழந்தை வாளியில் விழுந்து பலி..! மருத்துவமனைக்கு சீல்

0 4157

கொரோனா பாதிப்புக்குள்ளானதால் தனிமைப்படுத்தப்பட்ட 11 மாத ஆண்குழந்தை விளையாடும் போது தண்ணீர் வாளியில் தவறி விழுந்து பலியான அதிர்ச்சி சம்பவம் பாலக்காட்டில் அரங்கேறியுள்ளது. குழந்தையின் சடலத்தை பரிசோதித்த மருத்துவமனைக்கு சீல் வைத்ததோடு மருத்துவர் மற்றும் செவிலியர்களையும் கேரள சுகாதாரதுறையினர் தனிமைப்படுத்தியுள்ளனர் 

தமிழகத்தில் அறிகுறி இல்லாமல் கொரோனா நோய் தொற்றுக்குள்ளானவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் வீடுகளில் தனிமைப்படுத்தி வருகின்றனர். அவர்களது வீட்டுக்கு முன்பு ஒரு பேரிகார்டு வைத்து அடைத்து விடுகின்றனர். ஆனால் கேரளாவில் கொரோனா நோய் தொற்று இருப்பவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று விட்டு, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் தனிமைப்படுத்தப்பட்ட 11 மாத குழந்தை ஒன்று பரிதாபமாக பலியாகி உள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு அடுத்த சாலிச்சேரி பகுதியை சேர்ந்த முகமது ஷாபிக் - லியானா தம்பதியரின் 11 மாத ஆண்குழந்தை எக்ஸன் முகமது. இவர்களின் உறவினர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என முகமது ஷாபிக் மற்றும் லியானா அகியோரை சுகாதாரத்துறையினர் வீட்டில் தனிமைப்படுத்தியுள்ளனர்.

இதனால் அவர்களது 11 மாத ஆண் குழந்தையான எக்ஸன் முகமதுவை தனியாக விளையாட விட்டுள்ளனர். சிறிது நேரம் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மாயமானதால் அதிர்ச்சி அடைந்த தம்பதியர் குழந்தையை தேடியுள்ளனர்.

அங்கிருந்த தண்ணீர் வாளியில் குழந்தை எக்ஸன் சடலமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றுள்ளனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர், நீரில் மூழ்கியதால் உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தார்.

இதற்கிடையே தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் இருந்தவர்கள் குழந்தையுடன் வெளியில் சென்றதை அறிந்த கேரள சுகாதாரதுறையினர் விரைந்து வந்து, அடக்கம் செய்வதற்காக குழந்தையின் சடலத்தை கைப்பற்றி எடுத்துச்சென்றனர்.

மேலும் பரிசோதனை செய்த மருத்துவர் மற்றும் குழந்தையை தொட்டு தூக்கியதால் 5 செவியர்களையும் உடனடியாக தனிமைப்படுத்தியதோடு அந்த தனியார் மருத்துவமனையையும் பூட்டி சீல்வைத்தனர். கொரோனா பரவலை தடுப்பதற்காக இந்த அவசர நடவடைக்கை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் உள்ள குழந்தைகளை, பெற்றோர் தங்கள் கண் எதிரில் மட்டுமே விளையாட விட வேண்டும், குழந்தைகள் எட்டிப்பிடித்து விளையாடும் வகையில் தண்ணீர் வாளிகள் மற்றும் தொட்டிகள் இருப்பதை தவிர்ப்பது எப்போதும் குழந்தைகளுக்கு நல்லது என்று சுட்டிக்காட்டுகின்றனர் காவல்துறையினர்.

அதே நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்றோருக்கு தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments