புல்வாமாவில் தாக்குதல் சதி முறியடிப்பு.. பயங்கரவாதிக்கு வலைவீச்சு..!

0 1039
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கார்குண்டு மூலம் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் தீட்டியிருந்த சதித் திட்டத்தை பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கார்குண்டு மூலம் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் தீட்டியிருந்த சதித் திட்டத்தை பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.

புல்வாமா மாவட்டம் லேத்போராவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து கார்குண்டு மூலம் தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 பேர் பலியாகினர்.

இதேபோன்ற தாக்குதல் சதித் திட்டத்துடன் வெள்ளை நிற காரில் வெடிகுண்டுகளை நிரப்பிக் கொண்டு பயங்கரவாதி ஒருவன் சுற்றி திரிவதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, ராஜ்போரா (Rajpora) பகுதியில் சந்தேகப்படும்படி வந்த காரை நிறுத்தினர்.

ஓட்டுநர் இருக்கையில் இருந்த பயங்கரவாதி நிறுத்தாமல் வேகமாக சென்றதால் காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து காரை வேகமாக ஓட்டிச் சென்ற பயங்கரவாதி, அதை வேறு இடத்தில் நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டான். அந்த காரை தேடி கண்டுபிடித்து, அதிலிருந்த வெடிகுண்டுகளை தகுந்த பாதுகாப்புடன் வெடிகுண்டு நிபுணர்கள் வெடிக்கச் செய்தனர்.

காரில் 40 முதல் 45 கிலோ வரை வெடிகுண்டுகள் இருந்ததால் அவை வெடித்தபோது அப்பகுதியே அதிர்ந்தது. முன்னெச்சரிக்கையாக அப்பகுதிகளில் உள்ள வீட்டில் வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டதால் அசம்பாவிதம் நேரிடவில்லை. சில வீடுகள் மட்டுமே லேசான சேதம் அடைந்தன.

காரை ஓட்டி வந்த பயங்கரவாதி, ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி அடில் என்று பாதுகாப்புப் படையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளான். இதையடுத்து அவனை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

ஹிஸ்புல் முஜாஹிதீன், ஜெய்ஸ் இ முகமது ஆகிய அமைப்புகள், பாதுகாப்புப் படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்ததும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனிடையே, அந்த காரில் 60 கிலோ எடை கொண்ட வெடிகுண்டுகள் இருந்ததாகவும், அந்த தாக்குதல் சதித் திட்டத்தை லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது ஆகிய அமைப்புகள் கூட்டாக தீட்டியிருக்கலாம் எனவும் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜெய்ஷ் இ முகமது அமைப்பிலுள்ள வெடிகுண்டு தயாரிப்பில் நிபுணனான வாலீத் பாய் (Waleed Bhai), அந்த வெடிகுண்டுகளை காரில் பொருத்தியிருக்கலாம் எனவும் அவர்கள் சந்தேகம் கூறுகின்றனர். காரின் பதிவு எண் போலியானது எனவும், அது ஜம்முவை சேர்ந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண் எனவும் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் ஸ்ரீநகரில் இருந்து அதிகாரிகள் உள்ளிட்ட 400 வீரர்களுடன் 20 சிஆர்பிஎப் வாகனங்கள் இன்று காலை ஜம்முவுக்கு புறப்பட இருந்தது. அந்த வாகனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி பேரிழப்பை ஏற்படுத்த பயங்கரவாதி சதித் திட்டம் தீட்டியிருக்கலாம் என பாதுகாப்புப் படையினர் சந்தேகிக்கின்றனர்.

அதற்கு முன்பாக வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மடக்கி அழித்ததால் பெரும் சதி முறியடிக்கப்பட்டு விட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments