உள்நாட்டு விமான சேவை தமிழகத்திலும் தொடக்கம்...!

0 3389
61 நாட்களுக்கு பின் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் உள்நாட்டு விமான சேவை தொடக்கம்

இந்தியாவில் 61 நாட்களுக்கு பின்னர் உள்நாட்டு விமான சேவை தொடங்கபட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் விமான சேவைகள் செயல்படத் துவங்கியுள்ளன.

கொரோனா பரவலை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, 4வது கட்டமாக நீட்டிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்காக பல்வேறு தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு விமான சேவைகளுக்கு மட்டும் மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களை தவிர்த்து இருமாதங்களுக்கு பின்னர் நாடு முழுவதும் இன்று முதல் உள்நாட்டு விமான சேவைகள் இயங்க தொடங்கியுள்ளன.

தமிழகத்திலும் உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. சென்னை விமான நிலையத்திலிருந்து 116 பயணிகளுடன் முதல் விமானம் காலை 6.35 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றது. மேலும் மற்றொரு விமானம் 20 பயணிகளுடன் மதுரை புறப்பட்டது. முன்னதாக மதுரை செல்லும் விமானம் தான் முதலாவதாக புறப்படவிருந்த நிலையில், பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் 5.40க்கு புறப்பட வேண்டிய விமானம் 7.05 மணிக்கு 2வதாக புறப்பட்டு சென்றது.

அதே போல் டெல்லியிலிருந்து 27 பயணிகளுடன் முதல் விமானம் சென்னை வந்தடைந்தது. வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் வரும் விமானங்களில் 25 பயணிகள் மட்டுமே வர அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் விமானத்தில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 27 பயணிகள் அழைத்து வரப்பட்டனர். அதே சமயம் தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் விமானங்களில் 50 சதவீத பயணிகளை அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயணிகள் அனைவருக்கும் கொரோனா அறிகுறிகள் உள்ளதா என பரிசோதிக்கப்படும் சூழலில், அறிகுறி இல்லாவிட்டாலும் கையில் மை வைத்து 14 நாட்களுக்கு தனிமைபடுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொற்று உறுதி செய்யப்படுபவர்களை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து பிற பகுதிகளுக்கு இன்று மட்டும் 19 விமானங்கள் இயக்கப்படுகின்றன. பிற பகுதிகளிலிருந்து சென்னைக்கு 16 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இதனிடையே டெல்லி உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்து வரும் விமானங்களுக்கே சென்னை விமான நிலையத்தில் முன்னுரிமை அளிக்கப்படுவதால், திருச்சியிலிருந்து சென்னைக்கு இயக்கப்பட இருந்த இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் பயணிக்க 25 பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில், நாளை அவர்கள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இன்று திருச்சியிலிருந்து பெங்களூரு செல்ல 60 பயணிகள் முன்பதிவு செய்திருந்த நிலையில், இரவு 9.50 மணிக்கு அந்த விமானம் திட்டமிட்டபடி புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை விமான நிலையத்திற்கு முதலாவதாக, சென்னையிலிருந்து 20 பயணிகளுடன் வந்தடைந்த விமானம், அங்கிருந்து 56 பயணிகளுடன் மீண்டும் சென்னை புறப்பட்டு சென்றது. தெர்மல் ஸ்கிரீனிங் செய்யப்பட்ட பின்னர் அனுப்பி வைக்கப்பட்ட பயணிகள், 14 நாட்களுக்கு வீடுகளிலேயே தனிமைபடுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கோவை விமான நிலையத்திற்கு முதலாவதாக டெல்லியில் இருந்து 65 பயணிகளுடன் இண்டிகோ விமானம் வந்தடைந்தது. தொடர்ந்து 70 பயணிகளுடன் சென்னையில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் வந்தடைந்தது. கோவை வந்த பயணிகள் அனைவருக்கு விமான நிலைய வளாகத்திலேயே பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments