சூப்பர் மார்க்கெட்டில் கொரோனா வாங்கி வந்த பாதிரியார்..! அச்சத்தில் மக்கள்

0 6683
சூப்பர் மார்க்கெட்டில் கொரோனா வாங்கி வந்த பாதிரியார்..! அச்சத்தில் மக்கள்

தூத்துக்குடியில் பாதிரியார் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், அவர் கடைசியாக சென்று வந்த தனியார் ஹைப்பர் மார்க்கெட்டுக்கு சென்றவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக இருந்தது.

கோயம்பேட்டில் இருந்தும், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்தும் தங்கள் கிராமத்துக்கு படையெடுக்கும் நபர்களால் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மளமளவென அதிகரித்து 100 ஐ தாண்டிவிட்டது.

அந்தவகையில் இருசக்கர வாகனத்திலும், காரிலும் மகாராஷ்டிரத்தில் இருந்து ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள தங்கள் கிராமங்களுக்கு ரகசியமாக வந்து தங்கி இருந்தவர்களுக்கு காய்ச்சல், இருமல் ஏற்பட்டதால் அவர்களுக்கு கொரோனா நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிய வியாபாரிக்கும், அவரது மனைவி, மகன் மற்றும் மகளுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கால்வலி சிகிச்சைக்கு சென்ற 65 வயது பாதிரியார் ஒருவருக்கு அறிகுறி ஏதும் இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் இவருக்கு காலில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.

அண்மையில் அவருக்கு காலில் வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதித்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் தங்கி இருந்த சிறுமலர் இல்லம் தொடங்கி அமெரிக்கன் மருத்துவமனை அமைந்துள்ள முக்கிய சாலையான தூத்துக்குடி - ராமேஸ்வரம் சாலை கயிறுகட்டி அடைக்கப்பட்டது.

இந்த சாலை வழியாகத்தான் வெளி மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்கு வரும் பெரும்பாலான வெளியூர் வாகனங்கள் எந்த ஒரு அனுமதிச்சீட்டும் இல்லாமல் சுதந்திரமாக தூத்துக்குடிக்குள் நுழைந்து வந்தன. பாதிரியார் தங்கும் இல்லம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும், சாலையிலும் கிருமினாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இதற்கிடையே, பாதிரியாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடைசியாக வேலவன் ஹைப்பர் மார்ட் என்ற கடைக்கு சென்று வந்ததாக கூறியுள்ளார். எனவே அங்கிருந்து பாதிரியாருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சுட்டிக்காட்டியிருக்கும் அதிகாரிகள், சூப்பர் மார்க்கெட்டிற்கு காய்கறி மற்றும் மருந்து பொருட்கள் வாங்க சென்று வந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பெரும்பாலான மக்கள் வந்து செல்லக்கூடிய பெரிய சூப்பர் மார்க்கெட்டில் இருந்து புதிதாக ஒருவருக்கு இந்த நோய்த் தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளதால் சுகாதார துறையினர் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments