ஆதரவற்ற மூதாட்டிக்கு.. அடைக்கலம் தந்த பெண் காவலர்..!

0 1805

சென்னையில் ஆதரவின்றி தவித்து வந்த 65 வயது மூதாட்டிக்கு உணவளித்து தனது வீட்டிலேயே தங்க வைத்துள்ள பெண் காவலரின் செயல் உயரதிகாரிகளின் பாராட்டை பெற்றுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள கழிஞ்சம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் தனலட்சுமி. 65 வயதான இவருடைய மகன் மற்றும் மருமகள் ஆகிய இருவரும் மஞ்சள்காமாலை நோயால் சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தனர். இருவரது மருத்துவ செலவிற்காக பலரிடமும் வாங்கிய கடன் நெருக்கடியால், சென்னை பூந்தமல்லியில் உள்ள விடுதியொன்றில் ஒரு வருடமாக சமையல் வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதும், விடுதியை மூடி, மூதாட்டியையும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இதனால் என்ன செய்வது எங்கு போவது என திகைத்த மூதாட்டி தனலட்சுமி சொந்த ஊர் செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே உணவின்றி இரண்டு நாட்களாக தங்கியிருந்துள்ளார்.

கோயம்பேடு பகுதியில் கொரோனா வேகமாக பரவியிருந்ததால், அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர், அடையாறில் உள்ள உறவினர் வீட்டில் தஞ்சமடைந்துள்ளார். சுமார் 15 நாட்களுக்கு மேலாக அங்கே தங்கியிருந்த மூதாட்டியை, கொரோனா அச்சத்தால் உறவினர்களும் வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டனர்.

மாநகராட்சியின் ஆதரவற்றோர் முகாம் இயங்கி வருவது பற்றி அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, மாநகராட்சி ஊழியர்களும் அவரை மீட்டு அழைத்து செல்லவில்லை. இதன் பின்னர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்த மூதாட்டி தனலட்சுமி, இரண்டு நாட்களாக அடையாறு பேருந்து பணிமனை அருகே தங்கியிருந்துள்ளார். அடையாறு போலீசார் மூதாட்டி தனலட்சுமியை வந்து விசாரித்து அவரை பெண்கள் காப்பகத்தில் சேர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

அப்போது அங்கு பணியில் இருந்த அடையார் காவல் நிலைய முதல் நிலை காவலர் மரியபுஷ்பம் மேரி, மூதாட்டி தனலட்சுமியின் நிலைமையைப் பார்த்து, தன்னுடன் அழைத்து செல்ல விருப்பம் தெரிவித்திருக்கிறார். மூதாட்டியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று கடந்த 3 நாட்களுக்கும் மேல் தாயைப்போல கவனித்து வருவதாக கூறியுள்ளார்.

கொரோனா பேரிடர் காலத்திலும் கருணையுடன் பெண் காவலர் மரியபுஷ்பம் மேரி செய்த செயலை, சக காவல் அதிகாரிகள் முதல் உயர் அதிகாரிகள் வரை அனைவரும் பாராட்டியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments