144 தடையை மீறிய.. வாகன ஓட்டிகள்..!

0 3053

கொரோனா பரவாமல் தடுக்க 144 தடை அமலில் உள்ள நிலையில், ஆபத்தை உணராமல் சென்னையின் பல இடங்களில் ஆங்காங்கே மக்கள் வாகனங்களில் வலம் வந்தபடி இருந்தனர்.

சென்னையில் நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை அமலில் உள்ள போதிலும், மக்கள் அதை கண்டுகொள்ளாமல் ஆங்காங்கே வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாலையில் நடைபயிற்சி, ஓட்ட பயிற்சியில் ஈடுபட்ட அவர்கள், டீ கடைகளுக்கு உறவினர்கள், அண்டை வீட்டினருடன் சென்று தேநீர் அருந்துதல், செய்திதாள்கள் வாங்கி வருதல் போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.

144 தடை அமலில் இல்லாத காலத்தில் சுதந்திரமாக மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்தது போல பல இடங்களில் சாலைகளில் மக்கள் பயணித்தனர். இதற்கு பெண்களும் விதிவிலக்கில்லை என்பது போல அவர்களும் பல இடங்களில் முகத்தை துணியால் மூடியபடி பயணித்ததை காண முடிந்தது.

திருவொற்றியூர் காலடிப்பேட்டை சந்தைக்கும், 144 தடைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்பது போல அங்கு இன்று அனைத்து கடைகளும் திறந்திருந்தன. இதேபோல் மக்களும் அதிக எண்ணிக்கையில் வழக்கம் போல பொருள்களை வாங்கி சென்றதை காண முடிந்தது. கொரோனா பரவாமல் தடுக்க  இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வையும் யாரும் கடைபிடிக்கவில்லை. 

ராயப்பேட்டையில் சாலையிலும் வீதியிலும் ஆங்காங்கே மக்கள் அலட்சியத்துடன் நடமாடியபடி இருந்தனர். திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ் பகுதிகளில் தேவையில்லாமல் பொதுமக்கள் ஊர் சுற்றி வந்தபடி இருந்தனர்.  அவர்களை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.

மயிலாப்பூர் பகுதியில் காய்கறி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய கடைகளும் திறந்திருந்தன. இருப்பினும் தடை அமலில் இருந்ததால் மக்கள் கூட்டம் காணப்படவில்லை.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், சென்னையில் உள்ள நொச்சிக்குப்பம், பட்டினப்பாக்கம் பகுதிகளில் வசிக்கும் மக்கள் நோயின் திவீரத்தை உணராமல் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் இருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மீன் கடைகள் வழக்கம்போல் செயல்பட்டதுடன், குடிசை மாற்று வாரியத்தில் பெண்கள் கும்பலாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

மீனவர்கள் வலைப்பின்னும் பணிகளில் ஈடுபட்டதுடன் சிலர் கும்பலாக அமர்ந்து சீட்டுக்கட்டு விளையாட்டுகளிலும் ஈடுபட்டனர். ஆபத்தை உணராமல் அலட்சியமாக இருக்கும் மீனவ மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments