தமிழகம் திரும்பிய இளைஞருக்கு கொரோனா -சமூகத் தொற்றாக மாறியதன் அறிகுறியா?

0 12737

டெல்லி சென்று தமிழகம் திரும்பிய 20 வயது இளைஞருக்கு கொரோனா எப்படி தொற்றியது என இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், அதுவே சமூகத் தொற்றாக கொரோனா மாறியதற்கு அறிகுறியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தமிழகத்தில் மொத்தம் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அதில் 2ஆவது நபர், டெல்லி சென்று சென்னை திரும்பிய பிறகு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அந்த 20 வயது நபரோடு பயணித்தவர்கள், தங்கியிருந்தவர்கள் அனைவரும் கண்காணிப்புக்காக தனிமைப்படுத்தப்பட்டனர்.

அதேசமயம், அந்த இளைஞருக்கு எங்கிருந்து கொரோனா தொற்றியது என கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை திரட்டப்பட்ட விவரங்களின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட இளைஞர் வெளிநாடுகளுக்கு சென்றதில்லை என்பதோடு, கொரோனா தொற்று பாதித்த யாருடைய சுற்றுப்புறத்திலும் இருந்ததில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

அப்படியானால், கொரோனா தொற்று உள்ள ஒருவர், அது இருப்பது தெரியாமலேயே பிறருக்கு பரப்பிக் கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல், மூன்றாவது கட்டமான சமூக நோய்த்தொற்றாக இதுவரை மாறவில்லை என அதிகாரப்பூர்வமாக சொல்லப்பட்டு வரும் நிலையில், டெல்லி இளைஞருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது அதை சந்தேகிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், பாதிக்கப்பட்ட நபர் யார் யாரோடு தொடர்பில் இருந்தார் என்பதை கண்டறிவது எளிமையான விஷயம் அல்ல என்றும், அது முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் கூறியுள்ளது.நோயாளியே தன்னைப் பற்றிக் கூறும் விவரங்கள் மட்டும் போதாது, அவரை அறியாமல் நேரடி அல்லது மறைமுகத் தொடர்புகள் ஏற்பட்டிருந்தாலும் கண்டறிய வேண்டும். எனவே, முழுமையாக ஆய்வு செய்யாமல் எந்த முடிவுக்கும் வரமுடியாது என இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்று ஒரு நபருக்கு உறுதிப்படுத்தப்படும்போது, அவருக்கு எப்படி பரவியது எனக் கண்டறிய முடியவில்லை எனில், சமுதாய நோய்த் தொற்று என வரையறுக்கப்படும். கொரோனா தொற்று இருக்கிறது எனத் தெரியாமலேயே, அதாவது அறிகுறிகள் வெளியே தெரியாமலே உள்ள நபர்கள், தங்களை அறியாமல் பிறருக்கு நோய்த்தொற்றை பரப்பிக் கொண்டிருப்பதே சமுதாய நோய்த்தொற்றுக்கு காரணமாகும்..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments