திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா கொரோனா..? என்ன சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்

0 12397

புதிய கொரோனா வைரஸ் திட்டமிட்டு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது அல்ல, இயற்கையாகவே உருவானது என அமெரிக்க விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

கொரானா வைரஸ் சீனாவுக்கு வெளியே பரவி, உலகிற்கே அச்சுறுத்தலாக மாறத் தொடங்கியவுடன், அதுபற்றி பல்வேறு ஊகத் தகவல்கள் உலா வரத்தொடங்கின. உயிரியல் போரின் ஆயுதமாக, ஆய்வகத்தில் உருவாக்கி பரப்பப்பட்டதுதான் புதிய கொரோனா வைரஸ் என சமூக வலைத்தளங்களில் தீவிரமாக கருத்துகள் பரப்பப்பட்டன. ஆனால், கொரோனா வைரஸின் மரபணுத் தொகுதி மற்றும் மூலக்கூறு அமைப்பின் அடிப்படையில், அது ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என அந்ததுறை சார்ந்த வல்லுநர்கள் கூறிவந்தனர்.

இதற்கு முன்னர் சார்ஸ் மற்றும் மெர்ஸ் நோய்களை ஏற்படுத்திய வைரஸ்களில் இருந்து கொரோனா வைரஸ் மிகவும் மாறுபட்டதாக இருந்ததால், மரபணு பொறியியல் முறையில் அதை உருவாக்கியிருக்க முடியாது என விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், புதிய கொரோனா வைரஸின் மூலக்கூறு கட்டமைப்பு, இதற்கு முன்னர் எறும்புதின்னி மற்றும் வவ்வால்கள் மூலம் பரவிய வைரஸ்களின் மூலக்கூறு கட்டமைப்பை போல உள்ளதையும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டி வந்தனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸின் மரபணுத்தொகுதி குறித்து சீன விஞ்ஞானிகள் வெளியிட்ட விவரங்களின் அடிப்படையில், அமெரிக்காவின் Scripps Research Institute-ஐ சேர்ந்த நுண்ணுயிரியல் துறை வல்லுநர்கள் ஆய்வு மேற்கொண்டனர். Nature Medicine பத்திரிக்கையில் வெளியாகியுள்ள அந்த ஆய்வு முடிவின்படி புதிய கொரோனா வைரஸ், திட்டமிட்டு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதாக இருக்கமுடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸில் உள்ள, மனித உடலின் செல்களை துளைப்பதற்கான, கூர்மையான கொக்கி போன்ற புரத அமைப்பு, இயற்கை தேர்வு முறையிலேயே உருவாகியிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.

ஏசிஇ2 ரிசப்டார்ஸ் என்று குறிப்பிடப்படும் என்சைம் புரதமே, மனித உடலில் ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது. இந்த ஏசிஇ2 ரிசப்டார்ஸை குறிவைக்கும் வகையில் வைரஸ் பரிணமித்துள்ளதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்கேற்ப, மனிதசெல்களில் வலுவாக தன்னைப் பிணைத்துக் கொள்ளும் வகையில், வைரஸின் புரத அமைப்பு உள்ளது. எனவே, இயற்கைத் தேர்வு முறையிலேயே புதிய வைரஸ் உருவாகியிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் விலங்குகளிலேயே புதிய வடிவில் பரிணமித்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம், அல்லது நோய் ஆபத்தற்ற வடிவில் மனிதர்களுக்கு பரவி, மனித உடலில் புதிய கொரோனா வைரஸாக பரிணமித்திருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments