உலக அளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 18 ஆயிரமாக உயர்வு

0 1483

உலக அளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை  2 லட்சத்து 18 ஆயிரமாக உயர்ந்துள்ளது.  

அமெரிக்காவில் 9 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு பலியானோரின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது.

சுமார் ஒரு கோடி பேர் வீடுகளில் தனிமை நோய்தடுப்புக் காவலில் உள்ளனர். நியூ யார்க்கில் அடுத்த 45 நாட்களில் தொற்று உச்சகட்டத்தை அடையும் என கூறப்படும் நிலையில் மருத்துவமனைகளில் மேலும் சுமார் ஒன்றரை லட்சம் படுக்கைகள் தேவைப்படுவதாக நகர மேயர் தெரிவித்திருக்கிறார்.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக லண்டனில் 40 சுரங்க ரயில் போக்குவரத்து நிலையங்கள் இன்று முதல் மூடப்படுகின்றன. கொரோனா அச்சுறுத்தலை அடுத்து ஐரோப்பிய ஒன்றியம் தனது எல்லைகளை மூடியுள்ளது.

இதனிடையே சக உறுப்பு நாடுகளான ஆஸ்திரியா, ஸ்பெயின், இத்தாலி, சுவிஸ், டென்மார்க் ஆகியவற்றை சார்ந்தவர்கள் ஜெர்மனிக்குள் நுழைய அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.

இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 207 பேருக்கு தொற்று உறுதியானது. இதை அடுத்து மொத்த தொற்று எண்ணிக்கை அங்கு 35 ஆயிரத்து 713 ஆகவும், கொரோனா பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 978 ஆகவும் உயர்ந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரானில் கொரோனாவுக்கு நேற்று புதிதாக 147 மரணங்கள் நிகழ்ந்தன. இவற்றையும் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்து 135 ஆக அதிகரித்துள்ளது. தொற்று எண்ணிக்கை 17 ஆயிரத்து 361 ஆக உள்ளது. தென் கொரியாவில் நேற்று புதிதாக 142 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து தொற்று எண்ணிக்கை 8 ஆயிரத்து 565 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 91 ஆகவும் உயர்ந்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்டில், 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தொற்று எதிரொலியாக சுற்றுலா, விசிட் விசா போன்றவற்றுக்கு விதிக்கப்பட்ட தடையை ரெசிடன்சி விசாக்களுக்கும் நீட்டித்து இருப்பதாக ஐக்கிய அரபு எமிரேட் தெரிவித்துள்ளது.பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பிஜித் தீவுகளில் முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் வெளிநாட்டவர் வருவதற்கு தடை விதித்துள்ளன.

ஆஸ்திரேலியா, மார்ச் இறுதி முதல் மே மாதம் வரை சர்வதேச விமானப் போக்குவரத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. மேலும் ஒருவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து வங்க தேசத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆறு மாத தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பாதிக்கு மேற்பட்ட இடங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. மலேசியாவில் மக்கள் நடமாட்டத்திற்கு நாடு தழுவிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments