2021 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியமைக்கப்போவது யார்..? பேரவையில் காரசார விவாதம்

0 12125

வரும் சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி என்பது தொடர்பாக முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும் சட்டப்பேரவையில் சூடாகக் கருத்து பரிமாற்றம் செய்துகொண்டனர். நூறு நாள் வேலைத்திட்டத்தில், நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படுவதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் திமுக குரல் கொடுக்கலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சட்டப்பேரவையில் உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக கொறடா சக்கரபாணி, நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் மக்களுக்கு உரிய முறையில் பணம் வழங்கப்படுவதில்லை என குற்றம் சாட்டினார்.

மத்திய அரசு தான் இத்திட்டத்திற்கான பணத்தை பயனாளிகளுக்கு வழங்கி வருவதாகவும், மாநில அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்தார்.

வங்கிக்குச் சென்று பணத்தை எடுப்பதற்கு பயனாளிகள் சிரமத்திற்கு உள்ளாவதாக துரைமுருகன் கூறினார். இந்த திட்டத்தை எதிர்த்து திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்ட முதலமைச்சர், அதை ஏற்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தால் அதை தமிழக அரசு செயல்படுத்தும் என்றார்.

உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதாகக் கூறும் திமுக, விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத் தேர்தலில் தோல்வி அடைந்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக வெற்றி பெற்றதாக குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, மக்கள் உண்மையை புரிந்து கொண்டதால் இடைத் தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றியை தந்ததாக கூறினார்.

வேலூர் தொகுதியிலும் மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றதாகவும், அங்குள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக அதிகவாக்குகளை பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். மக்களிடம் அதிமுகவின் செல்வாக்கு கூடியிருக்கிறது என்பதையே இது காட்டுவதாகவு முதலமைச்சர் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மிக விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆட்சி அமைக்கும் போது நாடாளுமன்ற தேர்தலில் கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் என்றார்.

2021ல் நிறைவேற்றுவதற்கான வாக்குறுதிகளை, நாடாளுமன்ற தேர்தலின்போது ஏன் தெரிவித்தீர்கள் என்று முதலமைச்சர் கேள்வி எழுப்பினார். மேலும், 2021ல் யாரை ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

முன்னதாக, முதலமைச்சர் பேசும்போது தொடர்ந்து இடையூறு செய்த திமுக உறுப்பினர் ஆஸ்டினை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். மு.க.ஸ்டாலினும், துரைமுருகனும் உறுதியளித்ததை தொடர்ந்து ஆஸ்டினை வெளியேற்றும் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments