நாட்டின் வளர்ச்சிக்காக வரி செலுத்த வேண்டுமென பிரதமர் வலியுறுத்தல்...

0 806

நாட்டின் வரிவிதிப்பு முறையில் சீர்திருத்தம் மேற்கொள்வதற்கு முந்தைய அரசுகள் தயங்கிய நிலையில், அதனை மாற்றிக் காட்டியது பாஜக அரசுதான் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் வளர்ச்சிக்காக வரி செலுத்த முன்வர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் வருடாந்திர கருத்தரங்கில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது, புதிய பாய்ச்சலோடு, வலுவான பொருளாதார கட்டமைப்போடு, புதிய இந்தியா பீடுநடைபோடுவதாக பிரதமர் குறிப்பிட்டார். நாட்டில் எந்தவித பொருளாதார தேக்கமும் இல்லை என்றும், வேகமான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கான கட்டமைப்போடு இந்தியா இயங்கிக் கொண்டிருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்துவது என்ற இலக்கு எட்டக்கூடியதுதான் என்று குறிப்பிட்ட மோடி, 3 டிரில்லியன் டாலர்களை எட்டுவதற்கு எட்டுவதற்கு 70 ஆண்டுகள் ஆகியுள்ளதாக சுட்டிக் காட்டினார்.

நாட்டின் வரி விதிப்பு முறையில் சீர்திருத்தம் மேற்கொள்வதற்கு முந்தைய அரசுகள் தயங்கியதாகவும், வரிவிதிப்பு முறையை மக்களை மையப்படுத்தியதாக மாற்றியது பாஜக அரசுதான் என்றும் மோடி தெரிவித்தார்.

வரி செலுத்துவதை மக்கள் சுமையாக கருதாத வகையில் சட்டதிட்டங்கள் எளிதாக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். வரி விதிப்புக்கு உள்பட்ட பலர், வரி செலுத்துவதை தவிர்க்க பல்வேறு வழிகளை கையாள்வதால் நேர்மையாக வரி செலுத்துவோரின் மீதான சுமை அதிகரிப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

130 கோடி இந்தியர்களில் ஒன்றரை கோடி பேர் மட்டும்தான் வரி செலுத்தியுள்ளதாகவும், 2 ஆயிரத்து 200 பேர் மட்டுமே தங்கள் ஆண்டு வருமானம் ஒரு கோடிக்கு மேல் உள்ளதாக கணக்கு காட்டியிருப்பதாகவும் மோடி கூறினார்.
வரி விதிப்புக்கு உள்பட்ட அனைத்து குடிமக்களும் நாட்டின் வளர்ச்சிக்காக வரி செலுத்த முன்வர வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

வரி செலுத்துவோரின் உரிமைகளை மதிப்பதாகத் தெரிவித்த மோடி, வரி செலுத்துவோர் எந்தவித துன்புறுத்தலுக்கும் ஆளாக மாட்டார்கள் என்று உறுதியளித்தார்.

கடந்த 8 மாதங்களில், வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு முடிவுகளை மேற்கொண்டதாக குறிப்பிட்ட மோடி, குடியுரிமை திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் ஆகியவை சாம்பிள் தான் என்றும், இனி தான் உண்மையான நடவடிக்கைகளை நாடு காணப்போவதாகவும், பிரதமர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments