வாக்குப்பதிவு நிறைவு..!

0 571

விக்கிரவாண்டி, நாங்கு நேரி தொகுதியில் வாக்குப்பதிவு முடிவடைந்ததை அடுத்து, வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன், திமுக வேட்பாளர் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி உள்பட 12 பேர் போட்டியிடுகின்றனர். துணை ராணுவப்படையினர் 300 பேர் அதிரடிப்படையினர் 400 பேர் போலீசார் 2000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. அதன் பின்னர் வாக்குச்சாவடி மையத்தில் காத்திருந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

வாக்குப்பதிவு முடிவடைந்தை அடுத்து மின்னணு எந்திரங்களை தேர்தல் அதிகாரிகள் மூடி சீல்வைத்து விழுப்புரம் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு எந்திரங்கள் கொண்டு சென்றனர். வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதே போன்று நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் உள்பட 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2 லட்சத்து 57 ஆயிரத்து 140 வாக்காளர்களுக்காக 299 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

களக்காடு என்ற ஊரில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஒப்புகை சீட்டு எந்திரம் 3 முறை பழுதானதால் அதிகாரிகளுடன் வேட்பாளர்களின் முகவர்கள் வாக்குவாதம் செய்தனர். அதனால் சுமார் 40 நிமிடங்கள் அங்கு வாக்குப்பதிவு தாமதமானது. அதே போன்று வடக்கச்சிமதில் என்ற கிராமத்தில் மின்னணு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. அதனால், அந்த வாக்குச்சாவடியில் மட்டும் கூடுதலாக ஒரு மணி நேரம் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

விக்கிரவாண்டி தொகுதியுடன் ஒப்பிடும் போது நாங்குநேரி தொகுதியில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவாகும். அதற்கு, குறிப்பிட்ட சமூகத்தினர் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டதே காரணம் என கூறப்படுகிறது.

மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர், எந்திரங்கள் மூடி சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றதாகவும், விக்கரவாண்டி தொகுதியில், 84.36 சதவீதம் வாக்குகளும், நாங்குநேரி தொகுதியில் 66 சதவீதம் வாக்குகளும் பதிவாகி இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. 69.44 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. மொத்தமுள்ள 35,009 வாக்காளர்களில் 24,296 வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

32 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள், முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடமான லாஸ்பேட்டை பகுதியில் உள்ள மோதிலால் நேரு ஆண்கள் தொழில்நுட்ப கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. வரும் 24 ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க இருக்கிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments