உயிரா? பணமா? எது முக்கியம்

0 644

திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் படி, போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத குறைப்பது மாநில அரசுகளின் விருப்பத்தை பொறுத்தது என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். விபத்துக்களை தடுக்கவே அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், மக்களின் உயிர் முக்கியமா, பணம் முக்கியமா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

மத்திய அரசு திருத்தப்பட்ட மோட்டார் வாகன மசோதாவை கடந்த ஜூலை மாதம் 23-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, கடந்த 1-ஆம் தேதி முதல் நாடு முழுக்க அமல்படுத்தி உள்ளது. இந்த சட்டத்தின் படி விதிக்கப்படும் அபராத தொகை மிக அதிகமாக இருப்பதாகவும்,இதனை குறைக்க உள்ளதாகவும் குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

வருகிற 16-ஆம் தேதி முதல் இந்த திட்டத்தை அமல்படுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.இதன்படி, மத்திய அரசு சட்டப்படி ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் அணியாமல் செல்பவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் என்ற நிலையில் அதனை 500 ரூபாயாக குஜராத் அரசு குறைத்துள்ளது.

ஓட்டுநர் உரிமம் இல்லாமைக்கு 5000 ரூபாய்க்கு பதில் 2000 முதல் 3000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணிப்பதற்கான அபராதம் 1000 ரூபாயில் இருந்து 100 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

காற்று மாசுபாடு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு அபராதம் 10 ஆயிரம் ரூபாய்க்கு பதில் 1000 முதல் 3000 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற புதிய ஹோண்டா ஆக்டிவா 125 அறிமுக விழாவின் போது, செய்தியாளர்களை சந்தித்த மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம், குஜராத்தில் அபராதம் குறைக்கப்பட உள்ளது குறித்து கேள்வி எழுப்பப் பட்டது. இதற்கு பதில் அளித்த அவர்,வருவாயை பெருக்குவதற்காக மத்திய அரசு அபராத த்தை அதிகரிக்கவில்லை என்றார்.

சட்டத்தை மீறுவோர் மட்டுமே அபராதம் செலுத்துவார்கள் என்ற அவர், சட்டத்தை மீறாமல் வாகனத்தை இயக்குவோர் ஏன் அபராதம் செலுத்த வேண்டும் என்றார். சாலை விதிகளை மீறுவதால் நாள் தோறும் விபத்துகள் ஏற்படுவதை சுட்டிக்காட்டிய அவர், ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக ஒன்றரை லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழப்பதாக கூறினார்.

சட்டத்தின் மீதான பயம் இருந்தால் மட்டுமே மக்கள் அதனை மதிப்பார் என்று அவர் குறிப்பிட்டார். மக்களின் உயிரா, அல்லது பணமா இதில் எது முக்கியம் என்று அவர் வினா தொடுத்தார். போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்படும் அபராத தொகையை குறைப்பது குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என்றும் அவர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments