வட கொரிய அதிபரை கிம்மை சந்தித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

0 961

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தித்துப் பேசினார். 5 நிமிடத்திற்கு மேலாக, இருவரும் நின்றுகொண்டே அளவளாவினர். வரலாற்றிலேயே முதன்முறையாக, வடகொரிய எல்லைக்குள் சென்ற அமெரிக்க அதிபர் என்ற பெருமையை டிரம்ப் தனதாக்கியுள்ளார். 

ஐ.நா. தீர்மானங்களையும் மீறி, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அணுகுண்டுகளை சோதனை செய்து, பன்னாட்டளவில், வடகொரியா தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், அமெரிக்காவுக்கும் - வடகொரியாவுக்கும் இடையே மோதல் போக்கு உருவானது.

இந்தச்சூழலில், வடகொரியா - தென்கொரியா இடையிலான பகைமை குறைந்து, நல்லுறவுக்கான வாய்ப்புகள் ஏற்பட்டது. வடகொரிய-தென்கொரிய அதிபர்கள் அடுத்தடுத்து சந்தித்துப் பேசினர். இதனால், இரு நாடுகளிடையே இணக்கமான சூழல் ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து, அமெரிக்கா-வடகொரியா இடையிலான போர்ப்பதற்றத்தை தணிக்கும் முயற்சியை தென்கொரிய அதிபர் தொடங்கினர். இதன் பலனாக, சிங்கப்பூரில் வைத்து, வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதன்முறையாக சந்தித்துப் பேசினார்.

அணு ஆயுதங்களை குறைப்பது தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது. பின்னர், அதிலும், பரஸ்பரம் கருத்துவேறுபாடு நிலவியது. இரண்டாவது முறையாக, வடகொரிய அதிபரை, வியட்நாமில் வைத்து, டிரம்ப் சந்தித்தார். இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

இந்த சூழல்நிலையில், ஜப்பானில் நடைபெற்ற ஜி-20 நாடுகள் மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரிய அதிபரை சந்தித்து, ஹலோ சொல்லப் போவதாக தெரிவித்தார். இதன்படி, ஜப்பானிலிருந்து தென்கொரியாவிற்கு வந்த அமெரிக்க அதிபர், இந்திய நேரப்படி, இன்று பகல் 12.15 மணியளவில் வடகொரிய அதிபரை சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. வடகொரி-தென்கொரிய எல்லையில், ராணுவமயமற்ற பகுதியில், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் முன்னிலையில், சந்திப்பு நடைபெற்றது. முதலில், வடகொரியாவிற்கு உட்பட்ட பகுதிக்குள் சென்ற டிரம்ப், கிம் ஜோங் உன்-ஐ கைகுலுக்கி வரவேற்றார்.

பின்னர், இருவரும் தென்கொரிய பகுதிக்குள் வந்தனர். சுமார் 5 நிமிடம் நின்றபடியே, இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பேசிய டிரம்ப், வடகொரிய அதிபரை, வாஷிங்டன் வெள்ளை மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருப்பதாக கூறினார்.

இதனைத் தொடர்ந்து, இருநாடுகளின் அதிகாரிகள், முன்னிலையில், டிரம்ப்-கிம் ஜோங் உன் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். வரலாற்றிலேயே முதன்முறையாக, வடகொரிய எல்லைக்குள் சென்ற அமெரிக்க அதிபர் என்ற பெருமையை டிரம்ப் தனதாக்கியுள்ளார்.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments