பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்பும் இருதரப்பு பேச்சுவார்த்தை

0 977

ப்பானின் ஒசாகா நகரில், பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்பும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். வர்த்தகம், ஈரான் பிரச்சனை, 5ஜி தொழில்நுட்பம், பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். 

ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பானின் ஒசாகா நகருக்கு சென்றுள்ளார். அங்கு அமெரிக்க அதிபர் டிரம்பை அவர் சந்தித்துப் பேசினார். ஈரான் பிரச்சனை, 5ஜி தொழில்நுட்பம், பாதுகாப்புத்துறை மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து பேசப்பட்டது.

இந்தியாவும் அமெரிக்காவும் முன்னெப்போதும் இல்லாத வகையில் நெருக்கமான நட்பு நாடுகளாக மாறியிருப்பதாகவும், ராணுவம் உள்ளிட்ட துறைகளில் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் டிரம்ப் கூறினார். .

மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி அமோக வெற்றி பெற்றதற்கும் அப்போது அவர் வாழ்த்து தெரிவித்தார். தேர்தலில் பெற்ற மிகப்பெரிய வெற்றிக்கு மோடி பொருத்தமானவர் என்று குறிப்பிட்ட டிரம்ப், அனைவரையும் ஒன்றிணைப்பதில் வெற்றி கண்டுள்ள மோடிக்கும் அவரது திறன்களுக்கும் கிடைத்த மிகச்சிறந்த பரிசு என்றும் பாராட்டினார்.

முதன் முதலில் மோடி பிரதமராக பதவியேற்ற போது பல கோஷ்டிகள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டிருந்ததாகவும், ஆனால் அவர்கள் தற்போது ஒரேபக்கம் வந்திருப்பதாகவும் டிரம்ப் கூறினார். பாதுகாப்புத்துறை விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படவில்லை என்றும், ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணைகள் வாங்குவது குறித்த பிரச்சனை பேச்சுவார்த்தையில் இடம்பெறவில்லை என்றும் வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே கூறியுள்ளார்.

வர்த்தக விவகாரங்களை பொறுத்தவரை, வர்த்தக முன்னுரிமை நாடு என்ற அந்தஸ்தை இந்தியாவிற்கு ரத்து செய்த பிறகு, இந்தியா தரப்பில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக டிரம்பிடம் மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.

அவை நடந்து முடிந்தவை என்றும், பிரச்சனைகளை எப்படித் தீர்த்துக் கொள்வது என்பது பற்றியே இனி சிந்திக்க வேண்டும் என்று மோடி கூறியபோது அதையும் டிரம்ப் வரவேற்றுள்ளார். இரு நாட்டு வர்த்தக அமைச்சர்களும் விரைவில் சந்தித்துப் பேசுவது என்று முடிவு செய்யப்பட்டதாகவும், கோகலே தெரிவித்துள்ளார்.

ஈரானில் ஏற்பட்டுள்ள சீரற்ற நிலை பல வழிகளிலும் இந்தியாவை பாதிக்கிறது என்பதும் டிரம்பிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பெட்ரோலிய இறக்குமதி மூலம் எரிசக்தித் தேவையை நிறைவு செய்வதில் மட்டுமல்ல, வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் பொருளாதார நலன்கள் அடிப்படையிலும் பாதிப்புகள் ஏற்படும் என்பதும் அமெரிக்க அதிபர் டிரம்பிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் நலன்களை கருத்தில் கொண்டு, வளைகுடா மண்டலம் நிலைத்தன்மையோடு இருப்பதை உறுதிசெய்ய தொடர்ந்து பேசலாம் என இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டதாக, வெளியுறவு செயலர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.

மேக் இன் இந்தியா திட்டத்தின் இலக்குகளை நிறைவேற்ற, 5ஜி தொழில்நுட்பம் வழங்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது தொடர்பாகவும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக வெளியுறவு செயலர் கூறியுள்ளார்.

வர்த்தக விவகாரங்களில் ஏற்பட்டுள்ள உரசலால், இருதரப்பு உறவில் பாதிப்பு ஏற்படுமா என்று கேட்டபோது, அதற்கு வாய்ப்பே இல்லை என்றும், ஒரு சில பிரச்சனைகள் இருந்தாலும் அதற்கு தீர்வு காணப்படும் என்றும் விஜய் கோகலே தெரிவித்தார்.

இதனிடையே, இந்தியப் பிரதமர்-அமெரிக்க அதிபர் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக, டிரம்பின் மகள் இவாங்கா கூறியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments