வரலாற்றை சுட்டிய இ.பி.எஸ்..! விளக்கம் அளித்த அமைச்சர்கள்..!! பேரவையில் காரசார விவாதம்

0 2269

சட்டமன்ற சிறப்புக் கூட்டம் மற்றும் பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சர் பதவி வகிக்கும் மசோதா தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களுக்கு காரசார விவாதம் நடந்தது. இதன் இறுதியில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தனித் தீர்மானம் பற்றி உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளதாலேயே அவை ரத்து ஆகிவிட்டதாகவோ, நிராகரிக்கப்பட்டதாகவோ அர்த்தமில்லையே என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு விளக்கமளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, குடியரசு தலைவர், ஆளுநர்கள் மசோதாக்களை நிராகரிக்கிறோம் என்று நேரடியாக கூற மாட்டார்கள் என்றும், 'வித்ஹெல்டு அண்டு ரிட்டர்ண்டு' என்று கூறினால் அதை நிராகரிக்கிறர்கள் என்பதே அர்த்தம் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய இ.பி.எஸ்., உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு முறையாக நடக்க வேண்டும், அதில் பிரச்சனை ஏற்படக் கூடாது என்பதால் அவையின் கவனத்திற்கு கொண்டுவந்ததாகவும், வழக்கு விசாரணைக்கு வரும் முன் ஏன் அவசரமாக கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும் வினவினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் போது மசோதாவை திருப்பி அனுப்பிவிட்டதாக ஆளுநர் கூற வாய்ப்பு இருப்பதாகவும், தற்போது மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் நிச்சயமாக ஆளுநர் கையெழுத்து போட்டுத்தான் ஆக வேண்டும் என்றும் விளக்கமளித்தார்.

இதையடுத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, உச்சநீதிமன்றத்தல் வழக்கு தொடுத்திருப்பது, ஆளுநர் தற்போது திருப்பிய அனுப்பிய 10 மசோதா குறித்து மட்டுமா, அல்லது நிலுவையில் உள்ள அனைத்து மசோதாக்களுக்கும் எதிராகவா என்று கேட்டார்.

அதற்கு, நிலுவையிலுள்ள மசோதாக்கள் மற்றும் 50 கோரிக்கை மனுக்கள் தொடர்பாகவும் ஆளுநர் பரிசீலிக்க உத்தரவிடக் கோரித் தான் வழக்கு தொடர்ந்துள்ளதாக அமைச்சர் ரகுபதி பதிலளித்தார். எஞ்சிய மசோதாக்கள் குறித்தும் வழக்கு விசாரணையின் போது எடுத்துக் கூறி , ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க அரசு முயற்சி மேற்கொள்ளும் என்று முதலமைச்சரும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர், பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக முதலமைச்சரே பதவி வகிக்கும் மசோதா 1994-இலேயே அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின் போது கொண்டு வரப்பட்டபோது தி.மு.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறினார்.

அதற்கு பதிலளித்த துரைமுருகன், அன்றைய தினம் மாநில அரசிடம் கருத்து கேட்டு துணை வேந்தர்கள் நியமிக்கும் நடைமுறை இருந்ததாகவும் தற்போதைய ஆளுநர் அந்த மரபுகளை பின்பற்றாததால் தான் மசோதா கொண்டு வரப்பட்டதாகவும் விளக்கமளித்தார்.

உடனே, நெஞ்சுக்கு நீதி புத்தகம் பாகம் 4-ல் துணை வேந்தர் நியமனம் தொடர்பான தி.மு.க.வின் நிலைப்பாடு பற்றி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எழுதியுள்ள கருத்துகளை இ.பி.எஸ். சுட்டிக்காட்டினார். தி.மு.க.வினர்எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடும் ஆளுங்கட்சியாகும் போது மற்றொரு நிலைப்பாடும் எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டதை அப்போதைய ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வுடன் சேர்ந்து தி.மு.க.வும் எதிர்த்ததாகவும், பல்கலைக்கழக விவகாரங்களில் அரசியல் வேறுபாடு பார்க்காமல் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து, மீன்வளப் பல்லைக்கழத்தின் பெயர் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி சில கருத்துகளை கூறி வெளிநடப்பு செய்தார். அந்த கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments