வீடு புகுந்து கணவனையும் மாமியாரையும் அடித்து வெளியே ஓடவிட்ட மருமகள்..!
நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில் 2 வது திருமணம் செய்த கணவரையும், அவதூறாக பேசிய மாமியாரையும் வீடுபுகுந்து மருமகள் புரட்டி எடுத்த சம்பவம் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரங்கேறி உள்ளது
திருமணம் செஞ்சி 2 வருஷம் குடித்தனம் நடத்துவாராம் .... அப்புறம் அம்மாவீட்டுக்கு அனுப்பிட்டு வெளி நாடு போய்விடுவாராம்...!
2 வருஷம் கழிச்சி வந்து... நடத்தையை பற்றி அவதூறா பேசுவாராம்... தட்டிக்கேட்டா தாய் வீட்டுக்கு அனுப்பி விட்டு 2 வது திருமணம் செஞ்சிக்குவாராம்....இது எந்த ஊர் நியாயமுன்னு கேட்டு கணவனை ஓடவிட்ட காட்சிகள் தான் இவை..!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த தலைவாசல், ஆறகளூர் கிராமத்தை சேர்ந்த கருணைக்கடல் என்பவரின் மகன் செந்தில்குமாருக்கும், ஆத்தூர் நேரு நகரை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள் அபிராமிக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. 2 ஆண்டுகளில் மனைவி அபிராமியை தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்த செந்தில்குமார் வெளி நாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டார். 2018 ஆம் ஆண்டு ஊர் திரும்பிய செந்தில்குமார், மனைவியை அழைத்துச்சென்று தனிக்குடித்தனம் சென்றதாகவும், கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் மனைவியை மீண்டும் தாய் வீட்டுக்கு அனுப்பி விட்டு செந்தில்குமார் தனது குடும்பத்துடன் வசித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
இருவருக்குமிடையே விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், கள்ளக்குறிச்சி தேவபாண்டலம் கிராமத்தை சேர்ந்த லாவண்யா என்ற பெண்ணை 2 வதாக திருமணம் செய்து கொண்டு செந்தில்குமார் குடும்பம் நடத்துவதாக மனைவி அபிராமிக்கு தெரியவந்ததால் கணவர் வீட்டுக்குள் புகுந்து ருத்ர தாண்டவமாடினார்
வீட்டுக்குள் இருந்த 2 வது மனைவியை பிடித்து நாலு சாத்து சாத்திய நிலையில், தனது நடத்தை குறித்து அவதூறாக பேசிய மாமியாரையும் புரட்டி எடுத்தார்
தடுக்க வந்த கணவர் செந்தில்குமாருக்கும் சில பல அடிகள் விழுந்ததால், அடி தாங்காமல் வீட்டை விட்டு வெளியே ஓடிச்சென்று 6 வருசமாக எங்கே போயிருந்தாய் ? என்று சவுண்டு விடும் சங்கடமான நிலை ஏற்பட்டது
நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் போதே உனக்கு இன்னோரு பொண்ணு கேட்குதா என்று அபிராமி ஆவேசமான நிலையில் தனது 2 வது மனைவியை வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் பெண் என்று சமாளித்தார் அப்படி இருந்தும் அபிராமியின் ஆவேசம் குறையவில்லை
மனைவியின் உறவினர்களும் வீட்டிற்குள் புகுந்து நியாயம் கேட்டதால் மாப்பிள்ளை செந்தில்குமார் பதற்றமானார்
மாமியார் மற்றும் கணவர் மீதுள்ள ஆத்திரத்தை எல்லாம் அடியாக இறக்கிய அபிராமி ஒரு கட்டத்தில் சாந்தம் அடைந்து வீட்டு வாசலில் படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
வெளியே வந்தால் மீண்டும் அடிவிழுமோ என்ற அச்சத்தில் செந்தில்குமார் குடும்பத்தினர் வீட்டிற்குள் இருந்தனர், தகவல் அறிந்து வந்த போலீசார், வீடுபுகுந்து தாக்குதல் மற்றும் சட்டவிரோத திருமணம் என இருதரப்பு புகார்களை பெற்று விசாரித்து வருகின்றனர்.
Comments