இறப்புக்கான நிவாரண நிதியிலுமா கைவரிசை..? எப்படித்தான் மனசு வருதோ இவங்களுக்கு..?.. பல நாள் திருடியவர் ஒரு நாள் சிக்கிய சம்பவம்..!

0 1946

இறப்பு நிவாரணத்திற்கு வழங்கப்படும் நிதியை தனது குடும்ப உறுப்பினர்கள் பெயருக்கு மாற்றி நான்கரை கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்து சொத்து வாங்கிக் குவித்த அரசு ஒப்பந்த பெண் பணியாளரின் தில்லாலங்கடி வேலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் அழுகையோடு வந்து மனு அளித்தனர் எறையூரைச் சேர்ந்த பத்மினி மற்றும் பெண்ணாடத்தைச் சேர்ந்த தேவகி. மனுக்கள் தனித்தனியாக அளிக்கப்பட்டாலும் இரண்டு மனுக்களுமே திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து தங்களுக்கான இழப்பீட்டு நிவாரணம் கிடைக்கவில்லை என்பதாகவே இருந்தது.

எனவே, இதுகுறித்து விசாரிக்க கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசுக்கு உத்தரவிட்டார் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்.

மனு கொடுத்த பெண்களிடம் கோட்டாட்சியர் விசாரித்தபோது, உழவர் பாதுகாப்புத் திட்ட உறுப்பினர்களாக இருந்த கணவர் 6 மாதத்திற்கு முன்பு இறந்துவிட்டதால், இயற்கை மரண நிவாரண நிதி கேட்டு அவர்கள் விண்ணப்பித்திருந்தது தெரிய வந்தது. 6 மாதங்களாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லையென என திட்டக்குடி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அலுவலகத்தில் விசாரணை நடத்தி, இணையதள விவரங்களை ஆய்வு செய்தார் கோட்டாட்சியர்.

ஆய்வின்போது, 4 மாதங்களுக்கு முன்பே அவர்கள் 2 பேருக்கும் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் தலா ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக கணக்கு எழுதப்பட்டிருந்தது தெரியவந்தது. எனவே, மாவட்ட கருவூல அலுவலகத்தில் உள்ள பணம் வழங்கப்பட்ட ஆவணங்களை ஆய்வுசெய்தார் கோட்டாட்சியர்.

அப்போது, அவர்களுக்கான பணம் வேறொரு வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டு முறைகேடு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டிலிருந்தே முறைகேடு நடைபெற்றிருப்பதும் தெரிய வந்தது.

எனவே, இதுகுறித்து மாவட்ட எஸ்.பியிடம் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட கணினி ஆபரேட்டர் அகிலா உள்பட 9 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விசாரணையில், கணினி ஆபரேட்டரான அகிலா, உழவர் பாதுகாப்பு திட்டத்தில் பயனாளிகளுக்கு வரும் பல்வேறு நிதியை கணவர் வினோத்குமார், தங்கை கணவர் பாலகிருஷ்ணன், பெரியப்பா மணிவண்ணன், தாய் விஜயா உள்பட உறவினர்கள் 8 பேரின் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றி 4 கோடியே 62 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. மோசடி செய்த பணத்தில் அகிலா குடும்பத்தினர் கார், நகை, சொத்துகள் வாங்கிக் குவித்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, அகிலா, வினோத்குமார், பாலகிருஷ்ணன், மணிவண்ணன், விஜயா ஆகிய 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 சொத்து பத்திரங்களின் நகல்கள், 2 கார், 1 சரக்கு வாகனம், ஐந்தரை பவுன் நகை, மற்றும் 68 ஆயிரம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டன.

அகிலா 8 மாத கர்ப்பிணியாக உள்ளதால் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மற்ற 4 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் கணினி ஆபரேட்டரால் தனியாக இவ்வளவு பெரிய மோசடியை அரங்கேற்ற முடியுமா என்ற கோணத்தில் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments