காத்திருந்த கண்கள்.. கலங்கடித்த மழை.. பேனர் சரிந்ததால் பரபரப்பு.. ஆவேசமான ஆசாமி அப்புறப்படுத்தப்பட்டார்.. !!

0 1611

சென்னை கொளத்தூரில் முதலமைச்சர் பங்கேற்பதாக இருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, திடீரென பெய்த கனமழையால் ரத்தானது. கொட்டும் மழையிலும் பயானாளிகள் காத்திருந்த பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு

சென்னை கொளத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர் திடீர் கனமழையால் சரிந்த நிலையில் அதனை படம் பிடித்த செய்தியாளரை ஒருவர் மிரட்டிய காட்சிகள் தான் இவை..!

சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட வீனஸ் நகரில் உள்ள பள்ளி மைதானத்தில் அனிதா அச்சிவர்ஸ் அகாடமி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுவதாக அறிவிக்கப்பட்டதால், பயனாளிகள் மதியம் 2 மணியில் இருந்தே காத்திருந்தனர்

வரவேற்பு வழங்குவதற்காக வாழைமரங்கள், தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. 15 அடி உயரத்தில் பெரிய பெரிய விளம்பர பேனர்கள் பள்ளி மைதானத்தை சுற்றி வைக்கப்பட்டிருந்தன. மாலை 4.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், 4 மணியளவில் கருமேகம் சூழ்ந்து திடீரென பலத்த காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது.

நலத்திட்ட உதவி பெற வந்தவர்கள் மழை மற்றும் காற்றின் வேகத்தை தாங்க முடியாமல் அமர்வதற்கு போடப்படியிருந்த பிளாஸ்டிக் சேர்களை தலைக்கு மேலே குடை போல தூக்கிப் பிடித்தபடி நின்றனர்

காற்றின் வேகத்தைத் தாங்க முடியாமல், வரவேற்பு பேனர்கள், கம்புகள் முறிந்து கீழே சாய்ந்தன. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. பேனர் கீழே விழுந்ததை வீடியோ எடுத்தபோது, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவர் வீடியோ எடுக்க கூடாது என்று தடுத்து கேமராவை பறிக்க முயன்றார்.

10 பேர் சேர்ந்து அடிச்சா என்ன பண்ணுவ என செய்தியாளரிடம் ஒருமையில் பேசி மிரட்டலும் விடுத்தார். சக செய்தியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மிரட்டிய அந்த நபர் திமுக இளைஞரணி வட்ட துணைஅமைப்பாளரான சிரில் என்பது தெரியவந்தது, அவரை கட்சியினர் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சி மற்றும் கனமழை காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதும், கொட்டும் மழையில் காத்திருந்த பயனாளிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments